தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் செயல்படும் நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன இரண்டடுக்கு பேருந்து நிழற்கூடத்தினை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.69.00 இலட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் செயல்படும் நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன இரண்டடுக்கு பேருந்து நிழற்கூடம் 400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலையத்தின் மூலம் தினசரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு கலைக்கல்லூரி வந்து செல்லும் மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர். இப்பேருந்து நிலையத்தின் தரைத்தளத்தில் குளிர்சாதன வசதியுடன் பயணிகளுக்கு இருக்கை வசதி, காத்திருப்பு அறை, சிறப்பு அங்காடி உள்ளிட்ட சிறப்பம்சங்களும், முதல்தளத்தில் தானியங்கி பணப்பரிவர்த்தன இயந்திர (ATM) வசதி, குளிர்சாதன பாதுகாக்கப்பட்ட தாய்-சேய் பாலூட்டும் அறை, மினி நூலக வசதி, படிப்பு அறை, இருக்கை வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்களும், மேலும், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா, வைஃபை, தருமபுரி பண்பலை, தொலைக்காட்சி, செல்பி பாயிண்ட், கார்டன் சிட் அவுட், கைப்பேசி சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமையப்பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, இஆப., தருமபுரி மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார், தருமபுரி நகர்மன்றத்தலைவர் லட்சுமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி உட்பட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.