தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகில் உள்ள, தர்மபுரி- சேலம் மாவட்ட எல்லையை கடந்து செல்ல மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடக்க வேண்டி உள்ளது, இந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடந்து செல்வதற்காக, ஒட்டனூர்- கோட்டையூர் இடையே ஒரு கட்டண பரிசல் பயணமும்... நாகமரை- பண்ணவாடி இடையே மற்றொரு கட்டண பரிசல் பயணம் உள்ளது.
இதை பயன்படுத்தி இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும், சேலம் மாவட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இதற்காக கட்டணம் தனிநபருக்கு 5 ரூபாய் எனவும், இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் எனவும் இருந்தது, இது கடந்த இரண்டு ஆண்டுகளில், படிப்படியாக உயர்ந்து, தற்போது தனி நபருக்கு 20 ரூபாய் எனவும், இரு சக்கர வாகனத்திற்கு 40 ரூபாய் எனவும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இத்தகைய கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இப்பகுதி பொதுமக்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஏரியூர் காவல் நிலையம் மற்றும் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் மனு அளித்தனர், ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர், பரிசிலை காவிரி கரையில் கட்டி வைத்து, இயக்காமல் தடுத்தனர் மேலும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதனைத் தொடர்ந்து பென்னாகரம் டிஎஸ்பி மகாலட்சுமி தாசில்தார் சவுகத் அலி உள்ளிட்டவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த ஒரு மாதத்திற்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
- பென்னாகரம் ஒன்றிய செய்தியாளர் S.திருவேங்கடம்.