காவிரி உபரி நீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கி பணிகளை தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட ஆயத்த மாநாடு தர்மபுரி நான்கு ரோட்டிற்கு அருகில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். இந்த ஆயத்த மாநாட்டில் சிறப்புரையாற்ற வந்திருந்த மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, இன்னும் இருக்கும் மூன்று ஆண்டுகளில் எஞ்சிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல் மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மதவெறி சக்தியாக இருக்கிற பா.ஜ.க அதோடு கூட்டணி வைத்திருக்கிற கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு தமிழகத்தை மதக்கலவரமோ அல்லது வேறு மாதிரியான கலவரமோ நடக்கும் மாநிலமாக மாற்ற முயற்சிக்கின்றார்கள். எனவே அப்படிப்பட்ட தீவிரமான சக்திகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு, ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் வேலை செய்யும் நபர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மாநாட்டின் முக்கிய கோரிக்கையே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தர்மபுரி மாவட்டத்தை வளம் கொழிக்கிற மாவட்டமாக மாற்ற வேண்டும். அதற்காக வீணாக கடலிலே கலக்கும் காவிரி உபரி நீரை, டெல்டா மாவட்டங்களுக்கு அவர்களது பாசன உரிமைக்கு பாதிப்பு இல்லாமல் கிடைக்கிற உபரி நீரை கொண்டுவந்து தர்மபுரி மாவட்டத்தில் இருக்கிற ஏரி, குளங்களை நிரப்பி அதன்மூலம் பாசன வசதி பெருக்குவதோடு நிலத்தடி நீரையும் உயர்த்த முடியும். மக்களுக்கு கோடை காலங்களில் குடிநீர் இல்லாத நிலைமை உருவாக்க முடியும். தர்மபுரி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் விவசாயம் செய்ய முடியாமல் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு செல்லும் அவல நிலைமை ஏற்படுகிறது. இதை தடுக்க காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மேலும் தமிழக அரசு அதன் தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி தமிழக ஆளுநரை பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு மாநில ஆளுநர் எப்படி எல்லாம் செயல்படக்கூடாதோ அந்த வகையில் சட்ட வரம்புகளை மீறி ஒரு அரசியல்வாதியைப் போல நமது ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் உண்மைக்கு மாறான பல பொய்யான தகவல்களை ஆளுநர் கூறி வருகிறார். குறிப்பாக, இந்த அரசு சிதம்பரத்தில் இருக்கிற தீட்சிதர்களை பழி வாங்கி வருகிறது என்று சொல்லி, அவர்களின் மேல் பொய் வழக்கு போட்டு அங்கு குழந்தை திருமணங்கள் நடப்பதாக சொல்லி அந்த குழந்தைகளை எல்லாம் இருவிரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்று ஆளுநர் பகிரங்கமாக கூறி வருகிறார். ஆனால் உண்மையில் அங்கு குழந்தை திருமணங்கள் நடக்கின்றது. அதன்பேரில் வந்த புகார் ஆய்வு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு தான் அங்கு பெற்றோர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
குழந்தை திருமணம் செய்யும்பொழுது அவர்களின் மேல் வழக்கு போடக்கூடாதா? அவர்களை கைது செய்யக்கூடாதா? ஏன் ஆளுநர் தீட்சிதர்களுக்கு பேசுகிறார் என்றால், அந்த அளவுக்கு அவருக்கு அந்த சாதி பாசம் ஆட்டிப் படைக்கிறது. அவர் எப்படி ஆளுநராக பதவி வகிக்க முடியும்?
இதையெல்லாம் ஆளுநர் ஏற்கனவே தமிழக அரசுக்கு புகாராக தெரிவித்து, தமிழக அரசு அவர்களை பற்றி நீண்ட விசாரணை நடத்தி அவர் சொல்வது எல்லாமே உண்மைக்கு புறம்பானது என்று தகுந்த ஆதாரத்தோடு தமிழக அரசு ஆளுநருக்கு அறிக்கை கொடுத்திருக்கிறது.
அதன்பின்பும் இரண்டு மாதம் கழித்து அதே உண்மைக்கு மாறான சம்பவங்களை ஆளுநர் இந்த அரசின் மீது குற்றம் சாட்டுகின்ற மனோபாவத்தில் தான் இருக்கிறார். ஆளுநர் ஒரு ஆர்.எஸ்.எஸ், பிஜேபி போன்று செயல்படுகிறார். ஏற்கனவே பலமுறை மத்திய அரசாங்கத்திடம் மாநில அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் புகார் கூறியும், தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இந்த ஆளுநரின் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு மோடி அரசு தயாராக இல்லை.
எங்களுடைய ஆழமான சந்தேகமே ஆளுநர் அவராக செயல்படவில்லை. மாறாக மோடி அரசாங்கம்தான் தமிழக அரசை ஏதாவது தொந்தரவு செய்ய வேண்டும், ஏதாவது கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆளுநரை பகடை காயாக பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே மோடி அரசாங்கம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.