
இந்த மே தின விளக்கக் கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக வந்திருந்த சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக எல்லா நாடுகளுமே வளர்ந்து கொண்டிருக்கின்றன. வளர்ச்சிக்கு காரணமான எல்லா நாட்டிலும் உள்ள உழைக்கிற மக்களுக்கு குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்கள் பணியாளர்களுக்கு வளர்ச்சியின் பயன்கள் கிடைப்பதில்லை. மாறாக சில கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து வளர்ச்சியின் பயன்களை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் மே தின விழாவின் முக்கிய கோரிக்கையாக இருக்கின்றது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள 3 அரசாணைகளின் காரணமாக தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்ற அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு அடிப்படை சம்பளம், அகவிலைப்படி என்பதெல்லாம் கிடையாது. மொத்தம் உள்ள தமிழக அரசு ஊழியர்களில் இவர்களின் எண்ணிக்கை சரிபாதியாக உள்ளது. தமிழக அரசு வழங்கக்கூடிய எந்த ஒரு சலுகையும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மாதாமாதம் சம்பளம் கூட வாங்காமல் வேலை செய்யும் அவல நிலை இந்த தமிழகத்தில் உள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருகிறோம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களை இங்கே அனுமதிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைகின்றது.
இந்த நிலை நீடித்தால் வருங்காலத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனில் அக்கறை கொள்ளாமல், நாட்டின் நலனில் அக்கறை கொண்டு முதலீடுகளை கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.
.gif)

