Type Here to Get Search Results !

தர்மபுரியில் மாம்பழ மொத்த விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு.


தர்மபுரி மாவட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி., ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கு வந்த புகார் அடிப்படையிலும், கடந்த வாரம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் உணவு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையிலும், இன்றைய தினம் தர்மபுரி  மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ஏ.பானு சுஜாதா, எம்.பி.,பி.எஸ்.,அவர்கள் தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் உள்ளிட்ட குழுவினர், தர்மபுரி நகராட்சி, பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, கோட்டை, மதிகோன்பாளையம் மற்றும் டவுன் ஹால் பகுதி, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாம்பழ மொத்த விற்பனை நிலையங்கள், குடோன்கள் மற்றும் வாழைப்பழம் விற்பனை நிலையங்கள், குடோன்களில்  திடீர் ஆய்வு செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் மாம்பழம் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் சில வியாபாரிகள் லாப நோக்கத்தின் அடிப்படையில் காய்கள் சீக்கிரம் பழுக்க, மாம்பழங்கள் செயற்கையாக அதாவது கார்பபைட் கல் மற்றும் ஏத்திலீன் திரவ மற்றும் பவுடர்கள் கொண்டு பழுக்க வைத்து விற்பனை  செய்கிறார்களா என்று  ஆய்வு நடத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. 


15க்கும் மேற்பட்ட மாம்பழ  மற்றும் வாழைப்பழ குடோன்களில் நடத்தப்பட்ட ஆய்வில் எந்த விதமான ரசாயனத்தை கொண்டும் பழங்கள் பழுக்க வைக்கப்படவில்லை என கண்டறியப்பட்டது. ஒரு மாம்பழ மொத்த விற்பனை கடையில் மட்டும்  சுமார் 50 கிலோ அளவிலான தரமற்ற அழுகிய பழங்கள் மற்றும் சிறிய அளவிலான செயற்கை ரசாயன பவுடர் இரண்டு பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் இரண்டு வாழைப்பழ குடோன்கள் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்ததுக்கு எச்சரித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. 


மேற்படி மூன்று கடைகளுக்கும் தலா ரூ.2000 உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு கடைகளில் இருந்து வாழைப்பழம் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நியமன அலுவலர்  அவர்கள், நுகர்வோர் தாங்கள் வாங்கும் மாம்பழங்கள் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா என்பதை கண்டறிய கீழ்காணும் வழிமுறைகளை தெரிவித்தார். இயற்கையாக பழுத்த பழங்கள்  அடிப்பகுதியில் இருந்து பழுக்க ஆரம்பிக்கும். இயற்கையான முறையில் பழுத்த மாம்பழம் காம்பு பகுதி பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்காது. 


மேலும் அனைத்து பகுதிகளும் ஒரு சேர மஞ்சள் நிறத்தில் இருக்காது. சில பகுதிகள் பச்சை, சிவப்பு, மஞ்சள் என நிறங்கள் வேறுபடும் ஆனால் கல் வைத்து பழுத்த பழங்கள் அனைத்துப் பகுதியும் பளீர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.  மாம்பழத்தை நுகரும்போது இயற்கையாக பழுத்த மாம்பழங்கள், பழ வாசனை அடிக்கும். மேலும் தண்ணீரில் மாம்பழத்தை போட்டால் இயற்கையாகப் பழுத்த பழங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும். செயற்கையான முறையில் பழுத்தவை மேல் மிதக்கும். மேலும் காம்பு பகுதியில் புளித்த வாசம் வீசும், சாம்பல் பூசினார் போல் இருக்கும்.


பழங்கள் உபயோகிக்கும் பொதுமக்கள் முடிந்தவரை பழங்களை தண்ணீரில் ஒரு மணி முதல் ரெண்டு மணி நேரம் போட்டு பிறகு கழுவி உபயோகப்படுத்தலாம். மேலும் மாவட்ட நியமன அலுவலர் தெரிவிக்கையில் இது போன்ற ஆய்வுகள் மாவட்டம் முழுவதும்  இந்த மாதம் முழுதும் தொடரும் எனவும் செயற்கையாக கார்பைடு கல் கொண்டோ, ஏத்திலீன் திரவம் மற்றும் பவுடர் கொண்டோ பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று விற்பனை செய்ய வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies