Type Here to Get Search Results !

ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கை.


தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஐசியு வார்டில் இரவு பணியில் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளி ஒருவர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு ஒன்று வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.


இந்நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 65 வயதுடைய பழனிச்சாமி என்பவர் கடந்த 30.04.2023 அன்று காலை நெஞ்சு வலியுடன் தீவிர இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இசிஜி எடுத்து பார்த்ததில் இருதய இரத்த குழாய்களில் அதி தீவிரமான அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. 


பின்பு அவரது இருதய ரத்தக் குழாய்களை சரி செய்யும் அதிநவீன மருந்து செலுத்தும் போதே அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு இருதயம் செயல் இழந்தது. இதயத்துடிப்பு இல்லை. மருத்துவர்களின் அதிதீவிர முயற்சியால் சிபிஆர் கொடுக்கப்பட்டு அவருக்கு இதயத்துடிப்பு மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஆனால் அவரது மூளை செயல்பாடு மற்றும் ரத்த ஓட்டங்கள் சீராக இல்லை. அதற்காக   இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருந்துகளும் செலுத்தப்பட்டு  மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார்.


எனினும் கடந்த 1ஆம் தேதி பின்னிரவு 1.45 மணிக்கு அவருக்கு மீண்டும் இருதயம் செயலிழந்தது. மறுபடியும் சிபிஆர் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. நோயாளி இறக்கும் வரை மருத்துவர்களும் செவிலியர்களும் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்தனர். அவர் இறந்த பிறகு 1.5.2023 பின்னிரவு 2.15 மணிக்கு நோயாளிகளின் உறவினர்களிடம் மருத்துவர் இறப்பை அறிவித்தார். அவரது இறப்பை தெரிவித்த பிறகு, அவரது உறவினர் தகாத மற்றும் தரக்குறைவான வார்த்தைகளால் மருத்துவரை திட்டியதால், மருத்துவர் தீவிர சிகிச்சையில் உள்ள மற்ற நோயாளிகளை கவனிக்க சென்றார்.


அதை ஒளிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் அவரது உறவினர்கள் பரவ விட்டுள்ளனர். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளோம். இனிவரும் காலத்தில் இதுபோன்று உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies