இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 38 பயனாளிகளுக்கு ரூ.44.28 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 127 பயனாளிகளுக்கு ரூ.76.20 இலட்சம் மதிப்பீட்டில் இணைய வழி வீட்டுமனைப் பட்டாக்களையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 74 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் முதியோர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.16500/- மதிப்பீட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 68 பயனாளிகளுக்கு ரூ.18.52 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வசதி, இலவச வீடு தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.6695/-மதிப்பீட்டில் பேட்டரி தெளிப்பான் உள்ளிட்ட வேளாண் உதவிகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3.51 இலட்சம் மதிப்பீட்டில் நுண்ணீர் பாசன திட்ட கருவிகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.11.74 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்கடன் உதவிகளையும் என மொத்தம் 338 பயனாளிகளுக்கு ரூ.2,61,28,179/- (ரூ.2.61 கோடி) மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
வருவாய்துறை மற்றும் பிறத்துறை சார்ந்த அலுவலர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே இங்கு வருகைதந்து பொதுமக்களிடம் சுமார் 250 கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதி வாய்ந்த, உரிய கோரிக்கைள் ஏற்கப்பட்டு இன்றைய தினம் சுமார் 2.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான புதுமைபெண் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று, கல்லூரியில் சேரும் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற மாணவி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆகையால் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிகளில் நன்கு படிப்பதற்கு உதவி செய்து, கல்லூரிகளில் சேர்த்து, உயர்கல்வி பெறுவதற்கு உறுதி செய்ய வேண்டும்.
மேலும், இப்பகுதிகளில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மாண்புமிகு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்களும் மற்றும் ஏற்கெனவே பரிசீலனையில் உள்ள மனுக்களும் உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படும்.
பொதுமக்கள் இதுபோன்ற முகாம்களுக்கு வருகைதந்து அரசின் திட்டங்கள், குறித்து அரசு அலுவலர்கள் எடுத்துரைப்பதை நன்கு கேட்டு அறிந்து அத்தகைய திட்டங்களுக்கு உரிய ஆவணங்களோடு முழுமையான விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம். அரசு மக்களின் உயர்வுக்காக திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இதனை தொடர்ந்து, புளுதிக்கரை ஊராட்சி, காட்டம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.10.90 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள். இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆ.கோவிந்தசாமி, தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.டி.கே.கீதாராணி, தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி.வி.கே.சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.க.விஜயா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.மாது, தருமபுரி ஒன்றியக் குழு உறுப்பினர் திரு.பொ.மகாலிங்கம், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.பெ.ஜெயசெல்வன், புளுதிக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் திரு.மா.தங்கதுரை, துணைத்தலைவர் திரு.பி.துரை உட்பட அனைத்து துறை மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
.gif)



