மறுக்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமைகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க குறைத்தீர் ஆணையம் அமைக்க வேண்டும், தமிழ்நாடு ஏஐடியுசி தர்மபுரி மாவட்ட பொது பணியாளர் சங்கம், ஓ.எச்.டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் கோரிக்கை.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஏஐடியுசி தர்மபுரி மாவட்ட முனிசிபல் பஞ்சாயத்து பொது பணியாளர்கள் சங்கம், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஓ.எச்.டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், உள்ளாட்சி பணியாளர் சம்மேளனத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு உள்ளாட்சி பணியாளர் சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் புகழேந்தி, மாவட்ட குழு லட்சுமி, மாதையன், செல்வம், மாதேஸ்வரன், ஒன்றிய தலைவர் செல்லன், ஒன்றிய பொருளாளர் தெய்வானை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உள்ளாட்சி பணியாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் ஆறுமுகம், சிபிஐ மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், ஏஐடியுசி மாநில துணை தலைவர் மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாதேஸ்வரன், சுதர்சனம், நடராஜன், புகழேந்தி, தமிழ்வாணன், முருகேசன், சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
- அனைத்து உள்ளாட்சி, பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு மாதம் ரூபாய் 21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்,
- தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,
- பேரூராட்சி, உள்ளாட்சியில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும்,
- அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வு பெறும் போது ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
- உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், ஓ.எச்.டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமைகளை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க குறைதீர் ஆணையம் அமைத்திட வேண்டும்,
- ஓய்வு பெற்ற பணியாளர்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு பணி வழங்க வேண்டும்,
உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது