தர்மபுரி நான்கு ரோடுக்கு அருகில் உள்ள ரோட்டரி ஹாலில் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இச்செயற்குழு கூட்டத்திற்கு நிறுவனத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவரும், தர்மபுரி மாவட்ட தலைவருமான அரங்கநாதன் வரவேற்புரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் ஆனந்த்சுப்பிரமணி, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ரஜினி, மாநில ஒருங்கிணைப்பாளர் இளவழகன், மாநில துணைத்தலைவர் சிவராஜ், மாநில மகளிர் அணி தலைவி சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக அரவிந்த் நடாத், சேஷாத்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். ராஜேஸ்வரன் முனிராஜ் தினகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில்..
- நவீன விவசாயம், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் விளை நிலங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்,
- பெண்கள் முன்னேற்றம், பெண்கள் பாதுகாப்பு, பெண் கல்வியை ஊக்கப்படுத்துதல், பெண்களை பாலின கொடுமைகளிலிருந்து பாதுகாத்தல், பெண் உரிமையை பேணிக் காத்து முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பு உறுதிச் சட்டம் கொண்டு வர வேண்டும்,
- நாட்டில் உள்ள நீர் நிலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், குட்டைகள் ஆகியவற்றை தூர்வாரி பாதுகாத்தும், பராமரித்தும் நிலத்தடி நீரினை உயர்த்திடவும், நாட்டின் குடிநீர் பிரச்சினையை முற்றிலும் போக்கிடவும் மத்திய மாநில அரசுகள் திட்டங்களை வகுத்து செயல்படுத்திட வேண்டும்,
- மத்திய மற்றும் மாநில அரசுகளின் அரசு துறைகள், பொதுத்துறைகளில் நடந்து வரும் லஞ்ச லாவண்ய செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்,
- தனியார் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தின் பட்டியலை தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் இணைய தளங்களில் வெளியிட வேண்டும் மற்றும் ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனங்களிலும் அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண பட்டியலை விளம்பர பலகையில் அனைவரும் அறியும் வகையில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.