இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய அமைச்சர் மூர்த்தி, "கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் போலியாக பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படி முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய பதிவுத்துறை அலுவலருக்கு அதிகாரம் கிடையாது. இதனைச் சரி செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும்" என்று பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை பதிவுத்துறை அலுவலருக்கு வழங்கும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. பல்வேறு துறை சார்பில் இந்த மசோதா ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த சட்டத்துக்குச் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தார்.
தற்போது இந்த திருத்தப்பட்ட சட்டம் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம், பதிவாளர், பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி பிரிவுகளுக்கு முரணாகப் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று கருதினால், அவர் தாமாகவோ அல்லது புகார் மீதோ நடவடிக்கை எடுத்துப் பதிவை ரத்து செய்யலாம்.
தமிழ்நாட்டில் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பதிவை ரத்து செய்வது தொடர்பாகப் பத்திரப்பதிவு துறைத் தலைவருக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்திருக்கிறது. இந்த மனுக்கள் மீது ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தர்மபுரி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு, தனக்கு சொந்தமான நிலத்தை தன்னுடைய பெயரை பயன்படுத்தி போலியாக பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அஞ்சல், திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் வேடியப்பன் என்பவர் தனது குடும்பத்தினருடன் தர்மபுரி பத்திரப்பதிவு அலுவலக வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இவர், தனக்கு சொந்தமான நிலத்தை வேறு ஒரு நபர் தன்னுடைய பெயரை பயன்படுத்தி போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளார். எனவே அந்த போலியான பத்திரத்தை ரத்து செய்து தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும் என பத்திரப்பதிவு அலுவலக வாயிலில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய சங்க செயலாளர் அருள் தலைமையில், தனது குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் செய்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தர்மபுரி காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்று பத்திர பதிவு அலுவலரிடம் பேசியதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.