இதன் தொழில் முனைவோர் செயலரங்கம், தர்மபுரி பென்னாகரம் சாலையில் அமைந்துள்ள ஜோதி மஹாலில் இன்று நடந்தது. அமெரிக்காவில் ஆரம்பித்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு, பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் ( பிஎன்ஐ ) அதன் இரண்டாவது அத்தியாயத்தை தர்மபுரியில் தொடங்கி உள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று அதன் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட செயல் இயக்குநர் பத்மநாபன் இன்று நடந்த தொழில் முனைவோர் செயலரங்கின்போது தெரிவித்தார்.
பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (பிஎன்ஐ)ன் தர்மபுரியின் இரண்டாம் அத்தியாயம் "ஐராவதம்" என்பது 54 உறுப்பினர்களின் பங்கேற்பைப் பெற்ற ஒன்றாகும். தர்மபுரியில் இரண்டாவது அத்தியாயத்தின் பயணம் இன்று முதல் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. ஐராவதத்தின் தலைவராக விக்ரமன், உதவி தலைவராக அகிலன் மற்றும் பொருளாளராக பிரதீப்குமார் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.
பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் ( பிஎன்ஐ ) என்பது ஒரு வணிக மற்றும் தொழில்முறை பரிந்துரை அமைப்பாகும். இது ஒவ்வொரு தொழிலிலிருந்தும் ஒருவரை மட்டுமே ஒரு அத்தியாயத்தில் சேர அனுமதிக்கிறது. இது 79 நாடுகளில் பரவியுள்ள சமூக வலைப்பின்னல் மற்றும் ஆயிரக்கணக்கான வணிக நபர்களுடன் நேருக்கு நேர் நெட்வொர்க்கிங்கை ஒருங்கிணைக்கும் தனித்துவமான தளமாகும்.

சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு “டாக்டர் ஐவன் மைஸ்னர்”- ஆல் அமெரிக்காவில் நிறுவப்பட்ட பிசினஸ் நெட்வொர்க் இண்டர்நேஷனல் இன்று 79க்கும் மேற்பட்ட நாடுகளில் 10,852 க்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் மற்றும் 2,99,182க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது.
BNI-யின் சாராம்சமான 'பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர பரிந்துரை, பரஸ்பர வியாபார வளர்ச்சி' என்பது ஒரு வர்த்தக முத்திரைக் கருத்தாகும். இது ஒரு நெட்வொர்க்கிற்குள் பரிந்துரைகள் அடிப்படையில் ஒருவர் எவ்வளவு அதிகமாக மற்றவர்களின் வியாபார வளர்ச்சிக்கு உதவுகிறார்களோ, அதைவிட பன்மடங்கு பயன் பெறுகிறார்கள் என்ற சாராம்சத்தின் வெளிப்பாடாக திகழ்கிறது.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.