“உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்று அய்யன் திருவள்ளுவர் புகழ்ந்து பாடிய உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு துணையாக இருக்கும் கதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றிகூறி மரியாதை செலுத்தும் நன்னாளாகவும், தமிழர் அனைவரும் ஓரினம் என்ற தமிழினத்தின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் பொன்னாளாகவும் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், ஆகியவற்றை 2,19,33,342 குடும்பங்களுக்கு 2429.05 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.

அதன்படி, பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (9.1.2023) அன்று சென்னை கடற்கரை சாலை, சத்யா நகரில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், இலவச வேட்டி, சேலைகளையும் வழங்கி நிகழ்வினை தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை பொதுவிநியோகத்திட்ட நியாய விலைக்கடையில் 09.01.2023 அன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு 2023 வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 463 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 572 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 42 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1077 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4,65,867 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 727 குடும்பங்களுக்கும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்தில் 74,368 குடும்ப அட்டைதாரர்களுக்கும், நல்லம்பள்ளி வட்டத்தில் 59,242 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பாலக்கோடு வட்டத்தில் 67,297 குடும்ப அட்டைதாரர்களுக்கும், காரிமங்கலம் வட்டத்தில் 52,673 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பென்னாகரம் வட்டத்தில் 73,455 குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரூர் வட்டத்தில் 61,082 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 78,477 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என தருமபுரி மாவட்டத்தில் 4,66,594 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிட வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.
- பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொண்ட பயனாளி திருமதி.க.விசாலாட்சி அவர்கள் தெரிவத்ததாவது:- திருமதி.க.விசாலாட்சி அவர்கள், தருமபுரி காமாட்சி அம்மன் கோவில் தெரு, தருமபுரி மாவட்டம் எனது பெயர் க.விசாலாட்சி நான் தருமபுரி காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறேன். எனது கணவரும் நானும் கூலி வேலை செய்து வருகிறோம். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.1000/- ரொக்கம், 1- கிலோ பச்சரிசி, 1-கிலோ சர்க்கரை, 1 முழு நீள கரும்பு மற்றும் வேட்டி சேலை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
- பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொண்ட பயனாளி திரு.குமார் அவர்கள் தெரிவத்ததாவது:- திரு.குமார் அவர்கள், நல்லம்பள்ளி வட்டம், பாகலஅள்ளி தருமபுரி மாவட்டம் எனது பெயர் குமார், எனது அப்பா பெயர் சித்தன் நான் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாகலஅள்ளி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது மனைவியும் நானும் கூலி தொழில் செய்து வருகிறோம். எனக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கியுள்ளார்கள். இந்த பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளது. இதுமிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. எங்களை போன்ற அனைத்து குடும்பங்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட முழுநீளக்கரும்புடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.