அதில் கூறி இருப்பதாவது, நான் நேற்று மாலை சுமார் 4:30 மணி அளவில் அரூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எனது மகள்களை அழைத்து வருவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, அரூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் நின்றிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் எனது வாகனத்தை நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்கு ரூபாய் 2300 பணம் கொடு என்று கேட்டனர்.
என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதற்கு ஆன்லைன் மூலம் அபராதம் கட்டு என்று கூறி ரசீது கொடுத்தார். அதில் அபராத தொகை ரூபாய் 1000 என்று குறிப்பிட்டிருந்ததை பார்த்து, என்னிடம் ரூபாய் 2300 கேட்டீர்கள் ஆனால் ரசீதில் ரூபாய் 1000 மட்டும் உள்ளதே ஏனென்று கேட்டதற்கு, என்னை தரக்குறைவாக பேசியதோடு மட்டுமல்லாமல், ஜீப்பின் பின்புறம் என்னை இழுத்துச் சென்று ஜீப் கதவை திறந்த நிலையில் வைத்து என்னை மறைத்துக் கொண்டு காவலர்கள் என்னை சராமாரியாக தாக்கினார்கள். காவல் ஆய்வாளர் என்னை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். நான் வலி தாங்க முடியாமல் கடுமையாக அலறியபடி உடையிலேயே மலம் கழித்து விட்டேன். அதை கூறி என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சிய போது என்னை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று எனது ஜாதி பெயரை சொல்லி கேவலமாக பேசியதோடு சரமாரியாக தாக்கினார்கள்.

பின்பு என்னிடம் வெற்று பேப்பர்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டு என்னை மீண்டும் எனது இருசக்கர வாகனம் நிறுத்தி இருந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டு உன் வண்டியை எடுத்துக் கொண்டு செல் என்று கூறினார்கள். பின்பு நான் எனது மனைவிக்கு போன் செய்து வரச் சொல்லி, அவர்கள் என்னை அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மருத்துவர்கள் எனக்கு உரிய சிகிச்சைகள் அளித்து, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர். அப்போது அங்கு வந்த ஜீப் டிரைவர் மற்றும் காவலர் எனது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோரிடம் பேசி என் மீது வழக்கு எதுவும் போட மாட்டோம் என்றும், ரூபாய் 500ஐ எனது மனைவி சங்கீதாவிடம் கொடுத்து மருத்துவ செலவிற்கு வைத்துக் கொள்ளுங்கள். இதுகுறித்து யாரிடமும் புகார் கொடுக்க வேண்டாம் என்றும் வற்புறுத்தினர். நாங்கள் அவர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்துவிட்டோம்.
நான் முறையாக காவல் ஆய்வாளர் அளித்த ரசீது படி அபராதம் செலுத்த தயாராக இருந்த நிலையிலும் அவர் அதிகமாக பணம் கேட்டது குறித்து கேள்வி கேட்டதால் என்னை ஜாதி பெயர் சொல்லி திட்டி அதிகார துஷ்பிரயோக செயலில் மனிதாபமானமின்றி கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.