இக்கிராம சபைக்கூட்டத்தில், அதகபாடி கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொதுசெலவினங்கள், சுகாதாரம், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் உற்பத்தியை தடைசெய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, கலைஞரின் வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), குடிநீர் வசதி, சாலைவசதி, கழிவுநீர் வாய்கால் வசதி, கழிப்பிட வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் கலந்துகொண்டு, பேசும்போது தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் இன்று நடைபெறுகின்றது. இந்த அதகபாடி ஊராட்சியில் நடைபெறுகின்ற இக்கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தருமபுரி மாவட்டம் சிறப்பான மாவட்டம். தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், தருமபுரி மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை கடைக்கோடி கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்படுத்தி வருகின்றது. கிராமங்களின் வளர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் கிராமங்களின் வளர்ச்சிக்கு அரசு செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த அதகபாடி ஊராட்சிக்கு அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள். மேலும், இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையேற்று தொழுநோய் உறுதிமொழியினை வாசிக்க ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

இந்த கிராம சபை கூட்டத்தில் அரசு துறை அலுவலர்களும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் பங்கேற்றார்கள். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.செளண்டம்மாள், தருமபுரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அ.மாலா, தருமபுரி வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன், தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.கணேசன், அதகபாடி ஊராட்சி மன்றத்தலைவர் திரு.பஷ்வராஜ் உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்கள், இதர உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.