அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, 4 தலைமுறைகளாக சுமார் 300 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறோம். விவசாயம் மட்டுமே எங்களின் முழு வாழ்வாதாரமாகும். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலப்பட்டா வழங்க வேண்டி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். அதற்கு எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2006 ஆம் ஆண்டு நிலமற்ற ஏழை விவசாய மக்களுக்கு இலவசமாக இரண்டு ஏக்கர் நிலம் அரசால் கொடுக்கப்பட்டது.

அந்த சமயத்திலும் எங்களுக்கு நில பட்டா வழங்கப்படாமல் காலம் கடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு முதலமைச்சரின் தனி பிரிவுக்கு பலமுறை, வருவாய்த்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்களுக்கு மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் நிலப்பட்டா இல்லாத காரணத்தினால் எங்களுடைய அடிப்படை தேவைகளான புதிய வீடு கட்டுதல், வீட்டிற்கு மின் இணைப்பு பெறுதல், விவசாயத்திற்கு மின் இணைப்பு பெறுதல், விவசாயத்திற்கு கிணறு தோண்டுதல், விவசாயம் செய்ய ஆழ்குழாய் கிணறு அமைத்தல், விவசாயத்தை மேம்படுத்த நிலத்தை சீரமைத்தல், கூட்டுறவு வேளாண்மை மூலம் கிடைக்கும் விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்கள் போன்றவைகள் பெற நிலப்பட்டா அவசியமாக உள்ளதால் இவற்றை நாங்கள் பெற முடியவில்லை.
மேலும் பொருளாதாரத்தை மேம்படுத்த விவசாயத்தைச் சார்ந்த தொழில்களான மாடு வளர்த்தல், ஆட்டுப்பண்ணை அமைத்தல், கோழி பண்ணை அமைத்தல், மத்திய மாநில அரசால் விவசாயத்திற்கு வழங்கப்படும் விதைகள், நாற்று வகைகள் அனைத்தும் வாங்க நிலப்பட்டா தேவைப்படுவதால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நிலப்பட்டா கொடுக்க ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.