உலக நவீன வாசக்டமி இருவார விழா ஆண்டு தோறும் நவம்பர் 21ந் தேதி முதல் டிசம்பர் 4ந் தேதி வரையில் உலக நவீன வாசக்டமி இருவார விழா அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உலக நவீன வாசக்டமி இருவார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை முன்னிட்டு, இன்றைய தினம் ஆண்களுக்கான நவீன வாசக்டமி - குடும்பநல நிரந்தர கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு இரதம் தருமபுரி மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தகுதியுள்ள ஆண்களை வாசக்டமி கருத்தடை சிகிச்சைக்கு ஊக்குவிப்பு செய்யவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது. 2022 டிசம்பர் 4ஆம் தேதிக்கு பிறகு அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
ஒரு குடும்பம் ஒரு வாரிசு என்பதற்கேற்ப ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் உள்ள தகுதிவாய்ந்த ஆண்கள் இந்த கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள முன்வர வேண்டும். இந்த முறையானது பெண்களுக்கு செய்யப்படும் கருத்தடை சிகிச்சையைவிட மிக மிக எளிமையானது. பக்கவிளைவுகள் ஏதுமில்லை. பயிற்சி பெற்ற மருத்துவர்களால் மூன்று நிமிடங்களில் செய்யப்படும்.

கத்தி இல்லை, தையல் இல்லை. தழும்பு இல்லை, மயக்க மருந்தும் தேவையில்லை, கருத்தடை சிகிச்சைக்குப்பின் அன்றாட வேலைகளை எப்பொழுதும்போல் செய்யலாம். இந்த குடும்ப நல கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1100/- வழங்கப்படுகின்றது. தகுதிவாய்ந்த ஆண்கள் இந்த எளிமையான கருத்தடை சிகிச்சையை செய்துகொண்டு வீட்டிற்கு மகிழ்ச்சியையும் நாட்டிற்கு பெருமையும் பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், திரு.பெ.இளங்கோவன், காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரவிக்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், அரசு தருமபுரி மருத்துவக்கல்லுரி மருத்துவமனை முதல்வர் மரு. அமுதவள்ளி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு. எம். சாந்தி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.ச.சௌண்டம்மாள், மருத்துவப்பணிகள் (குடும்ப நலம்) துணை இயக்குநர் மரு. மலர்விழி, மருத்துவப்பணிகள் (காசநோய்) துணை இயக்குநர் மரு. ராஜ்குமார், மருத்துவப்பணிகள் (தொழுநோய்) துணை இயக்குநர் மரு. புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) / ஒருங்கிணைந்த குழந்தை வளரச்சி பணிகள் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.ஜான்சிராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வி.மரியம் ரெஜினா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர்கள் திரு.வி.சீனிவாசன், திரு.தமிழ்வாணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவியர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
