![]() |
கோப்பு படம். |
கலை, குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது. மேலும் சுற்றியுள்ள உலகத்தைப்பற்றிய ஆழமான புரிதலை இது ஏற்படுத்துகிறது. இதனை நோக்கமாகக் கொண்டு இவ்வாண்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாட்டைக் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பாடுகள் வழி வகுக்கும். பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலும் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்படும்.
மாநில அளவிலான கலைத்திருவிழா இறுதிப்போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன் மற்றும் கலையரசி என்ற விருதுகளும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் மேம்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர்.
தருமபுரி மாவட்டத்தில் இப்போட்டிகள் பள்ளி அளவில் கடந்த 23.11.2022 முதல் 28.11.2022 வரை நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, வட்டார அளவிலான போட்டிகள் வருகின்ற 29.11.2022 முதல் 05.12.2022 வரையிலும், மாவட்ட அளவிலான போட்டிகள் வருகின்ற 06.12.2022 முதல் 10.12.2022 வரையிலும் நடைபெற உள்ளது.
இந்த மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெறுபவர்கள் மாநில அளவில் வருகின்ற 03.01.2023 முதல் 09.01.2023 வரை நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்பார்கள். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப, அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
