
இதில் 55 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். பாலக்கோடு அருகே சூடப்பட்டி நெடுஞ்சாலை திருப்பத்தில் பேருந்து வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர், பிரேக் போட்டுள்ளார், அதிகாலை முதலே மழை பெய்து கொண்டிருந்ததாலும், சாலை வழவழப்பாக இருந்ததாலும் பிரேக் நிற்காமல், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரம் விவசாய நிலத்தில் உள்ள 2 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது, இந்த விபத்தில் தொட்லாம்பட்டியை சேர்ந்த சம்விதா ( 8 மாத பெண் குழந்தை) தேன்கனிகோட்டையை சேர்ந்த தூருவாசன் (வயது .37), அவரது மனைவி ராஜேஸ்வரி(வயது.34 ), ஓசூரை சேர்ந்த விஜயலட்சுமி (வயது. 28), பவுன்ராஜ் (வயது. (54), நித்தியா (வயது. 12), பென்னாகரத்தை சேர்ந்த வாசுதேவன் (வயது .47), மதகேரி கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராஜ் (வயது. 67), இராயக்கோட்டையை சேர்ந்த வீரப்பன் (வயது. 58),தோமல அள்ளியை சேர்ந்த மாதையன் (வயது.59), புலிகரையை சேர்ந்த சக்தி (வயது. 26) தர்மபுரியை சேர்ந்த முரளிதரன் (வயது .24) உள்ளிட்ட 40 பேர் படுகாயம் அடைந்தனர், படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், இதில் 20 பேர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் 20க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தார்சாலையானது வழவழப்பாக உள்ளதால் மழை நேரங்களில் பிரேக் நிற்காமல் விபத்துக்குள்ளாகி வருவது குறிப்பிடதக்கது. இது குறித்து மகேந்திரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்வையிட்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் பார்வையிட்டு மருத்துவ உதவிகளை விரைந்து செய்து கொடுக்க அறிவுறுத்தினார். இவருடன் பேரூராட்சி தலைவர் முரளி உடனிருந்தார். அரசு பேருந்து கவிழ்ந்து 40 பயணிகள் விபத்துக்குள்ளான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.