இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவாரத்திற்குக்காக சில நாட்கள் காத்திருந்த நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் மூலம் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அதியமான் கோட்டை இரயில்வே மேம்பாலத்தினை இன்று (14.10.2022) திறந்து வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள அதியமான் கோட்டை இரயில்வே மேம்பாலமானது தருமபுரி மாவட்டம், சிவாடி மற்றும் தருமபுரி இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கடவு எண் 38-க்கு மாற்றாக பழைய தேசிய நெடுஞ்சாலை 7ல், அதியமான் கோட்டையில் 623.3 மீட்டர் நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இம்மேம்பாலத்தின் மூலம் நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி ஊர்களுக்கும், சேலம் போன்ற பெருநகரங்களுக்கும் காலதாமதமின்றி விரைவில் சென்று வரவும், மாணவ, மாணவியர்கள் எவ்வித சிரமமும் இன்றி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு எளிதாக சென்று வரவும், பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு சென்று வரவும் ஏதுவாக அமைவதால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) (கோவை வட்டம்) கண்காணிப்பு பொறியாளர் திரு.ஆர்.சரவணன், தருமபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு.எம்.ஏ.ராஜதுரை, தருமபுரி நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) உதவிப்பொறியாளர் திரு.சரவணன், நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், அதியமான் கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.மாரியம்மாள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


