Type Here to Get Search Results !

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்யுமாறும், உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்று இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அறிக்கை.

தற்போது பண்டிகை காலம் தொடங்கி உள்ள தமிழ்நாட்டில் அனைத்து விதமான விற்பனைகளும் அதிகரித்து உள்ளது. முக்கியமாக தீபாவளி பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவுபொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்தபந்தங்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாசாரமாக விளங்கி வருகிறது.

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புதுறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்க விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகலையோ உபயோகிக்க கூடாது. 

ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்த கூடாது. இதனை உறுதி செய்து அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் வழங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபர சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் உணவு தயாரிப்பாளர்கள், அனைவரும் முறையான பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது உணவு பாதுகாப்புதுறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு, தருமபுரி கூடுதல் கட்டிடம், ஆட்சியர் அலுவலகம் முதல் தளம் என்ற முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies