வத்தல்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தடுப்பணையிலுருந்து வெளியேறும் தண்ணீருடன் அன்னசாகரம் ஏரி மற்றும் சுற்றுப்புற ஏரிகளின் உபரிநீர் சனத்குமார் நதி கலந்து பாய்கிறது, சுமார் 40 கி.மீட்டர் தூரம் பாய்ந்து, தருமபுரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கடந்த பல சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நதியின் மூலம் பாசன வசதி பெற்று வந்தன.
தொடர் ஆக்கிரமிப்புகளால் சனத்குமார் நதி கால்வாய் பரப்பின் பெரும் பகுதி செடி, கொடிகள் மற்றும் புதர்கள் மண்டி உள்ளது. மேலும் கழிவு நீரும் இதனுடன் கலந்து வருவது வேதனையான ஒன்று, இதனால் தற்போது கழிவு நீர் கால்வாய் போல காட்சியளிக்கிறது இந்த நதி.
சனத்குமார் நதி கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும். மேலும் கால்வாய், தண்ணீர் செல்லும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு ரூ.50 கோடி மதிப்பீட்டில் சனத்குமார் நதி கால்வாயை சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது, ஆனால் இந்த திட்டப்பணிகள் இதுவரை வெறும் அறிவிப்பாகவே இருந்து வருகிறது. எனவே கிடப்பில் போடப்பட்ட இந்த பணியை விரைவாக தொடங்க வேண்டும் பொது மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.


