இதை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் மத்திய அரசின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடு குறித்து மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார். சட்ட மன்ற உறுப்பினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி ஏ.கோவிந்தசாமி, அரூர் வே.சம்பத்குமார் தருமபுரி எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவில் டாக்டர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும். தேவை உள்ள இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும். அனைத்து சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய சிறப்பு சிகிச்சை, மூளை நரம்பியல் சிகிச்சை, கண் வங்கி ஆகியவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது வலியுறுத்தினார்கள்.
கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் பேசியதாவது:- தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் சுகாதாரத் துறை சார்ந்த சில திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சில திட்டங்களின் செயல்பாட்டை இன்னும் மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள், மருத்துவக் கருவிகள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாநில அரசின் மூலம் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பினால் அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விழிப்புணர்வு அரசு ஆஸ்பத்திரிகளில் அனைவருக்கும் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சில மருத்துவ திட்டங்கள் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பற்றி பொதுமக்களுக்கு போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் உதவி கலெக்டர் சித்ரா விஜயன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவல்லி உள்பட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


