இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையேற்று மாணவ, மாணவியர்களிடையே பேசும்போது தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டம், கடகத்தூரில் செயல்பட்டு வரும் அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பயிற்சிகளில் மாணவ-மாணவிகள் சேர்ந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1000 ஊக்கத் தொகையாகவும், மாதம் தோறும் ரூ.750 கல்வி உதவித்தொகையாகவும் அரசு வழங்கி வருகின்றது.
மேலும், மாணவ, மாணவியர்கள் அங்கு தங்கி பயில அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதியும் உள்ளது. மாணவ, மாணவியர்கள் படிக்கும்பொழுதே தங்களுடைய தனித்திறன்களை மேம்படுத்திக்கொண்டால், எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புகளை பெற்று, பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய முடியும். உதாரணமாக டாடா போன்ற பெரிய நிறுவனங்களில் தொழிற்பயிற்சி முடித்த பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறந்த வேலைவாய்புகளை வழங்கி வருகின்றன.
எனவே, இதுபோன்ற பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தொழிற்கல்விகள் மிக மிக அவசியமாகும். குழந்தைகள் கல்வி பயில்வதற்கு அவர்களின் பெற்றோர்கள் முக்கிய காரணம். தான் கல்வி பயிலவில்லை என்ற போதிலும், தான் கற்காத கல்வியை தன் பிள்ளைகள் கற்க வேண்டும் என்று குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து சிறந்த முறையில் சிறப்பான கல்வி கற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து வருகின்றார்கள்.
இது போன்ற முயற்சிகளை பெற்றோர்கள் மேற்கொள்ளவில்லை என்றால், பிள்ளைகளின் கல்வியும் கேள்விக்குறியாகிவிடும். ஒவ்வொரு குழந்தையும் இதை உணர்ந்துகொள்ள வேண்டும். உங்களின் எதிர்காலத்திற்காக தமிழ்நாடு அரசும், உங்களின் பெற்றோர்களும் தேவையான அனைத்து உதவிகளையும் முழுமையாக செய்துகொடுத்து வருகின்றார்கள். அத்தகைய வாய்ப்பினை மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்தி கொண்டு சிறப்பான கல்வியை கற்பதோடு தங்களுக்கான தனித்திறமைகளையும் தொடர்ந்து வளர்த்து கொண்டே வர வேண்டும்.
வாய்ப்புகள் கிடைப்பது ஒருமுறை தான். அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி முன்வர வேண்டும் என்ற எண்ணத்தை இதயத்தில் பதிய வைத்து, உங்களின் எதிர்காலத்திற்கான திட்டங்களை நிறைவேற்றி கொள்வதில் உறுதி கொண்டு அதற்கான கல்வியை சிறப்பாக கற்க வேண்டும்.
தமிழக அரசின் உயர்கல்விக்கு வழிகாட்டும் இந்த நிகழ்ச்சி மாணவ-மாணவிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளின் உயர் கல்விக்கு வழிகாட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். அவர்களுக்கு உடனடி தீர்வுகள் இந்த சிறப்பு முகாமில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த முகாமிற்கு எந்த சூழலில் வந்திருந்தாலும், இங்கு வழங்கப்பட்ட தகவல்கள், நீங்கள் திரும்பி வீட்டிற்கு செல்லும்போது உங்கள் உள்ளங்களை ஒளிரச்செய்யும்.
தற்போதைய சூழலில் கிராமப்புறங்களில் இளைஞர்கள் சிலர் எந்த வேலைக்கும் செல்லாமல், தவறான பாதைகளில் சென்றுக்கொண்டிருக்கின்றனர். இது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. கல்வி பயின்ற இளைஞர்கள் அதற்கான வேலைகளுக்கு செல்லவேண்டும், கல்வியை பாதியில் விட்ட இளைஞர்கள் அதை தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பான கல்வியை அளித்திட அரசு எண்ணற்ற பல திட்டங்களையும், உதவிகளையும் வழங்கி வருகின்றது. சிறந்த ஆசிரியர், ஆசிரியைகளை கொண்டு பாடங்கள் சிறப்பாக கற்பிக்கப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவியர்களுக்கு எத்தகைய உயர்கல்வி வாய்ப்பு கிடைத்தாலும், அத்தகைய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி கொண்டு, கல்வி கற்பதை மட்டுமே இலட்சியமாக கொண்டு நன்கு படித்தால் எதிர்கால வாழ்வினை சிறந்ததாக அமைத்துகொள்ள முடியும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
தேர்வில் தோல்வி அடைந்தமை, உயர் படிப்பில் ஆர்வமின்மை, பணியில் சேர்ந்தமை, பெற்றோர் அனுமதியின்மை, உடல் நலமின்மை, தொழில் புரிதல், தேர்வு எழுதாமை, குடும்பச் சூழல், கல்லுாரியில் விரும்பிய பாடத்தில் சேர்க்கை கிடைக்காமை, அருகாமையில் கல்லுாரி இல்லாதது, மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்தமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உயர்கல்வி வாய்பை இழந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 50 மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் நான் முதல்வன் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு இச்சிறப்பு முகாமில் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு உயர்கல்வி தொடர்வதற்கான உத்திகள் குறித்தும், உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் பல்வேறு துறை அலுவலர்கள் விளக்கமளித்தனர். இம்முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், கல்லூரி கல்வி இயக்கக தருமபுரி மண்டல இணை இயக்குநர் திருமதி. என்.இராமலட்சுமி, தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.பி.கே.கிள்ளிவளவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) திருமதி.வி.ஜான்சிராணி, தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலர் திரு.மு.ராஜகோபால், அரூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு.ஷகில் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.