இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் கடந்த 5.9.2022 அன்று நடைபெற்ற விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் கடந்த 5.9.2022 அன்று நடைபெற்ற விழாவில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- நிதி உதவி அன்றைய தினமே வழங்கப்பட்டது.
இத்திட்டம் தருமபுரி மாவட்டத்திற்கு ஒரு சிறப்பான திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, தற்போது உயர்கல்வி பயின்று வருகின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் 4156 மாணவிகளுக்கு 2022 ஆகஸ்ட் திங்களில் தலா ரூ.1000/- வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 2022 செப்டம்பர் திங்களில் 4156 மாணவிகளோடு தகுதிகளின் அடிப்படையில் மேலும் 1,233 மாணவிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 5,389 மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தலா ரூ.1000/- வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் அரசு கல்லூரிகளிலோ அல்லது தனியார் கல்லூரிகளிலோ மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்வி, தொழிற்நுட்ப கல்வி, சட்டக்கல்வி போன்ற பல்வேறு வகையான உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- அந்தந்த மாணவிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு வழங்கப்படுகின்ற ஆயிரம் ரூபாய் நிதி உதவி என்பது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மிகச்சிறந்த உதவித்தொகையாகும். ஏனென்றால் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு உலக பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்த நிலையில், அந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாம் மீளாத நிலையிலும், பல்வேறு நிதிச்சுமைகள் இருக்கின்ற போதிலும், சமூக நலன் சார்ந்த ஒரு விஷயமாக, பெண்களின் உயர்கல்விக்காக, இது உயர்கல்வி பயிலும் பெண்களுக்கான ஒரு முதலீடாக இருக்க வேண்டும் என்று இத்திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி உள்ளார்கள். மாணவிகள் இந்த உதவித் தொகையினை முதலீடாக கொண்டு உயர்கல்வி கற்பதற்கும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்வதற்கும், புத்தகங்கள் வாங்குவது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 2022 ஆகஸ்ட் திங்களில் 4156 மாணவிகளுக்கு தலா ரூ.1000/- வீதம் ரூ.41,56,000/-மும், 2022 செப்டம்பர் திங்களில் 5,389 மாணவியர்களுக்கு தலா ரூ.1000/- வீதம் ரூ.53,89,000/-மும் என மொத்தம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2 மாதங்களில் மட்டும் தருமபரி மாவட்டத்தில் மொத்தம் ரூ.95,45,000/- (ரூ.95.45 இலட்சம்) மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று 5,389 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மாதம் ரூ.1000/- நிதி உதவியினை உயர்கல்விக்கு உத்திரவாதமாக மாணவிகள் பயன்படுத்தி கொண்டு, சிறந்த கல்வியை கற்பதோடு, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் தங்களை தயார் படுத்திக்கொண்டு உயர்ந்த இடத்தை மாணவிகள் அனைவரும் எட்ட வேண்டும், உயர்கல்வி என்பதை உங்கள் இலக்காக கொண்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.