இவ்விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பேசும்போது தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழக மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கும் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி அதனை முழுமையாக நிறைவேற்றி தந்து கொண்டிருக்கின்றார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பல்வேறு சீரிய முயற்சிகள் மற்றும் சுகாதார துறையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்த நிலை மாறி, தற்போது சிறப்பான வளர்ச்சியை நோக்கி வந்துகொண்டிருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தினம் ஒரு திட்டப்பணி தொடக்கம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள், நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள் உள்ளிட்ட அறிவிப்புகள் பல நிறைவேற்றப்பட்டு வருவதோடு, தொடர்ந்து நிறைவேற்றுவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்ட எந்தெந்த அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றார்கள். மேலும், அப்பணிகளை செயல்படுத்தும் விதமாக பல்வேறு அரசாணைகள் அந்தந்த துறைகளின் மூலம் வெளியிடப்பட்டு, அந்த திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டும் வருகின்றன.
கடந்த 10 ஆண்டு காலமாக இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டுமெனவும் ஆணையிட்டுள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நாங்களே தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று, அக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் உரிய தீர்வுகளும் நலத்திட்ட உதவிகளும் வழங்கபட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக இன்றைய தினம் 1001 பயனாளிகளுக்கு ரூ.4.20 கோடி மதிப்பீட்டிலான இணையவழி இலவச வீட்டுமனை பட்டாக்கள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளன. இதுவரையில் பட்டா இல்லாத இந்த மக்களுக்கு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள இப்பட்டாக்களின் மூலம் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பயனாளிகளுக்கு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் தருமபுரி மாவட்டத்திற்கு தொடர்ந்து வருகைதந்து, தருமபுரி மாவட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டும், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டும், புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டும், ஏற்கனவே நிறைவுபெற்ற திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டும் வருகின்றன.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் ஒவ்வொரு பகுதியாக முகாம் நடத்தப்பட்டு, அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து, நேரடியாகவே மக்களை நாடி, அவர்களின் குறைகளை மனுக்களாக பெற்று, இந்த ஒட்டுமொத்த மனுக்களையும் பரிசீலனை செய்து, தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு, அதற்கான நலத்திட்ட உதவிகளும் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பது, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தருமபுரி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனையினை தீர்ப்பதற்கான வழிகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இதனை நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் முழுமையாக மேற்கொள்ளப்படும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் அடையக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட இருக்கின்றது. அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி, வீட்டுமனை பட்டாக்கள் பெற பொதுமக்கள் சிரமபடுவதை போக்கிடும் விதமாக உடனடியாக தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதற்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்து, அதை நிறைவேற்றி வருகின்றது.
எனவே பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தகுதியான நபர்களுக்கு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய தினம் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களைச் சேர்ந்த 1001 பயனாளிகளுக்கு ரூ.4.20 கோடி மதிப்பிலான இணைய வழி இலவச வீட்டுமனை பட்டாக்களையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களைச் சேர்ந்த 48 பயனாளிகளுக்கு ரூ.19.85 இலட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.55,000/- செலவில் பொதுவிநியோக திட்ட பொருட்கள் பெறும் வகையில் 10 புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5.89 இலட்சம் மதிப்பீட்டில் நுண்ணீர் பாசன கருவிகள், உளுந்து செயல்விளக்க திடல்கள் அமைப்பதற்கான விதைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.51,750/- மதிப்பீட்டில் இலவச சலவைப் பெட்டிகள் மற்றும் இலவச தையல் இயந்திரங்களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களைச் சேர்ந்த 9 பயனாளிகளுக்கு ரூ.5.65 இலட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர்பாசனம், துல்லிய பண்ணையம் மற்றும் மின்கலன் தெளிப்பான் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 1083 பயனாளிகளுக்கு ரூ.4,52,86,598/- (ரூ.4.53 கோடி) மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.இரா.விஸ்வநாதன் அவர்கள் நன்றி உரையாற்றினார். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தாமரைச்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன், அரூர் தேர்வு நிலைப் பேரூராட்சி தலைவர் திருமதி. த. இந்திராணி, துணைத்தலைவர் திரு.து.தனபால் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தருமபுரி கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.இராமதாஸ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.வி.ராஜசேகரன், தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு.முகமது அஸ்லாம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி.கே.மாலினி, அரூர் வருவாய் வட்டாட்சியர் திருமதி.கனிமொழி, பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டாட்சியர் திரு.சி.சுப்பிரமணி உட்பட தொடர்புடைய அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


.jpg)