தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெர்த்தலாவ் ஊராட்சி கூசிகொட்டாய் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு மதுபான கடை திறக்கப்படுவதாக பொதுமக்களுக்கு வந்த தகவலை அடுத்து கிராம மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் நிர்வாக மேலாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
தற்போது புதியதாக அரசு மதுபான கடை அப்பகுதியில் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததின் பெயரில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து பாலக்கோடு வட்டாட்சியர் அவர்களிடம் மனு அளிக்க வந்தனர், சுமார் 2 மணி நேர காத்திருப்புக்குப் பிறகு வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் அலுவலகத்தில் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அலுவலகம் நுழைவாயிலில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதிய மதுபான கடை எங்கள் பகுதியில் திறக்கப்படும் பட்சத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
