வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் ஓட்டுநர் பள்ளியில் பயின்றோரை தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி, கூட்டமைப்பு சார்பில் நேற்று முதல் ஓட்டுநர், பழகுநர் தேர்வை புறக்கணித்து தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து பாலக்கோடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சரவணன் கூறியதாவது: பொதுமக்களுக்கு வாரத்தில் 3 நாளும், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு 2 நாளும் ஓட்டுநர் தேர்வு நடத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஓட்டுநர், பழகுநர் உரிமத் தேர்வுகளை மட்டும் புறக்கணித்துள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள 2,500க்கும் மேற்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் 99 சதவீத பள்ளிகள் நேற்றைய தினம் உரிமம் பெறுவதற்கான தேர்வுக்கு விண்ணப்பதாரர்களை அழைத்துச் செல்லவில்லை. உத்தரவை திரும்பப் பெறும் வரை ஸ்டிரைக் தொடரும் என்றனர்.
இந்த போராட்டத்தில் பொருளாளர் விஜயராகவன், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொன்டனர்.
