தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டி முடிக்கபட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் திறந்து வைத்து பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதனையடுத்து பென்னாகரம் சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையையும், ஏரியூர் மேம்படுத்தபட்ட அரசு ஆரசம்ப சுகாதார நிலையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுகாதார நிலைய மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நோயாளிகளிடம் மருத்துவ வசதி குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மகப்பேரு பிரிவு, ஐசியு வார்டு, அவசர கால சிகிச்சை பிரிவுகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்கு வைத்திருந்த பதிவேடுகளையும் சரிபாரத்து அதுகுறித்து அங்குள்ள பணியாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்ததோடு மருத்துவமனைகளுக்கு வருகை தரும் அனைத்து நோயாளிகளுக்கும் சிறப்பான சிகிச்சைகளையும், உயர் தரமான மருத்துவ சேவைகளையும் அளித்திட வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். இந்தாய்வின் போது மாவட்ட ஆட்சியர் சாந்தி, பொது சுகாதார துறை இயக்குனர் மருத்துவர். செல்வ விநாயகம், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர். செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி மற்றும் அரசு மருத்துவர்கள் என பலர் உடனிருந்தனர்.
