தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் UYEGP திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் தொழில் துவங்குவதற்கான வயது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள திட்டத்தில் பொதுப்பிரிவினர் வியாபாரம் செய்வதற்கு குறைந்தது 8வது வகுப்பு தேர்ச்சி, 35 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர், மாற்றுத்திறனாளிகளுக்கு 45 வயது வரை கடன் பெற சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.
புதிய அரசாணை படி மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் வயது, கல்வித்தகுதியில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
45 வயதை உயர்த்தி 55வயது வரை வங்கியில் கடன் பெறலாம். கல்வித்தகுதி தேவையில்லை, ஆண்டு வருமானம் ரூ. 5லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இவ்வாண்டில் வியாபாரம் மற்றும் வணிகம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலை தவிர்த்து மற்ற பொருட்களை வாங்கி விற்கலாம். தொழிற்சாலை உபரிபாகங்கள், கடை குறிப்பாக மளிகை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர், புத்தக நிலையங்கள் தொடங்குபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வங்கியில் கடன்பெறலாம்.
இதற்கு 25சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1.25லட்சத்தை பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு தருமபுரி, மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
