தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் பருவதன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் தர்மபுரி பென்னாகரம் சாலையில் குட்டை போல் தேங்கி நிற்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள், அக்கம் பக்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
மேலும் சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பள்ளி சிறுவர்கள் 4 பேர்இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவெடுத்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை பள்ளி சிறுவர்கள் மனுவாக எழுதினர். பின்னர் எழுதிச் சென்ற மனுவை சிறுவர்கள் பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புங்கமரத்து காட்டு கொட்டாய் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு ஊராட்சி நிர்வாகத்திடம் கொடுத்தனர்.
மனுவினை பெற்றுக் கொண்ட துணை வட்டார அலுவலர் பாலகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர் ராணி முனிராஜ் ஆகியோர் விரைவாக நடவடிக்கை எடுப்பதாக சிறுவர்களிடம் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர். கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறுவர்கள் சாக்கடை கழிவு நீரை அகற்ற மனு கொடுத்த சம்பவம் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.



