தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சிகுட்பட்ட டி.என்.சி விஜய் மஹாலில் 1,000-த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதைபொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு மற்றும் போதைப்பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி நேற்று (11.08.2022) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமைவகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.கலைச்செல்வன் இகாப., அவர்கள் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள் ஆகியோர் முன்னிலை உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் போதைபொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியான "போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்." என்ற உறுதிமொழியினை வாசிக்க அரசுத்துறை அலுவலர்கள், அனைத்து மாணவர்களும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இக்கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் சிறப்பான திட்டத்தை இன்றைய தினம் தொடங்கி வைத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (11.08.2022) நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி அனைத்து மாணவ, மாணவியர்களால் E pledge எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சிகுட்பட்ட டி.என்.சி விஜய் மஹாலில் போதைபொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு மற்றும் போதைப்பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி இன்று நடைபெறுகின்றது.
இதில் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியமான் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 1,000-த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தற்பொழுது மாணவச் செல்வங்கள் எதிர்கொண்டு இருக்கக்கூடிய ஆபத்துகள் கண்ணுக்கு தெரியக்கூடிய ஆபத்துகள் என்று பார்த்தால், முதலாவதாக, போதை பழக்கம். தெரிந்தோ, தெரியாமலோ, இந்த பழக்கத்திற்கு ஆளாகிவிடுகின்ற சிலரின் வாழ்க்கையே பாழாகி விடுகின்றது. இது போன்ற போதைப் பழக்கங்கள் பரவி விடக்கூடாது என்பதற்காகத் தான் மாணவர்களிடையே மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகின்றது.
உங்களது நண்பர்கள், யாரேனும் எதிர்பாராத விதமாக இதுபோன்ற போதை பழக்கத்தினை பழகி இருந்தால் அது குறித்த விவரங்கனை உடனடியாக உங்களுடைய ஆசிரியர்களின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். அப்பொழுது தான், அந்த மாணவனுக்கு உரிய அறிவுரை வழங்கி அப்பழக்கத்தை விட்டு ஒழிப்பதற்கும், நல்ல மாணவனாக அவர்கள் உருவாவதற்கும் உரிய அறிவுரைகளும், விழிப்புணர்வினையும் ஏற்படுத்த முடியும்.
இரண்டாவதாக, மொபைல் போன்களை தவறாக பயன்படுத்துவது. முன்பெல்லாம் மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேரங்களில் விளையாடும் பழக்கங்களும், புத்தகம் படிக்கும் பழக்கங்களும் இருந்து வந்தது. விளையாடுவது, புத்தகம் படிப்பது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு வந்தார்கள்.
ஆனால் தற்போது கைப்பேசிகள் வந்து விட்ட காரணத்தால் தொடர்ந்து கைப்பேசிகளை பார்ப்பது, மொபைல் போன்களை தவறாக பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மூன்றாவதாக பள்ளிகளில் படித்து வருகின்ற மாணவ, மாணவியர்கள் எதிர் பாலின ஈர்ப்பின் காரணமாக தவறான பாதைக்கு செல்லக்கூடிய நிலைகளும் ஏற்பட்டு விடுகின்றது. நாம் நல்ல விசயங்களை கற்றுக்கொள்வதற்கும், நம் சிந்தனை திறனை வளர்த்து கொள்வதற்கும் நம்மை தயார்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது கல்வி ஒன்று மட்டுமே என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உங்களுடைய எதிர்காலத்திற்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கி தருவது கல்வி ஒன்று மட்டுமே. இத்தகைய கல்வி கற்று வரும் சூழலில் உங்களுக்கு எத்தகைய தடைகள் வந்தாலும் அவை அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு இன்றியமையாததான கல்வியை கற்பதில் மட்டுமே மாணவர்கள் ஆகிய உங்களது கவனம் இருக்க வேண்டும்.
அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பாடப்புத்தகம் மட்டுமில்லாமல் நல்ல செய்திகள், நல்ல புத்தகங்கள், உங்கள் அருகாமையிலேயே இருக்கின்றது. இம்மாதிரியான ஆக்கப்பூர்வமான செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். நூலகங்களை பயன்படுத்தி கொண்டு நீங்கள் நன்றாக படியுங்கள். கைப்பேசியை ஒதுக்கி வைத்துவிட்டு புத்தகங்களை படிப்பதை மட்டுமே முக்கிய குறிக்கோளாக கொண்டால் நீங்கள் உயர்ந்த போன்ற இடத்தையும், சிறந்த வளர்ச்சியையும் எளிதில் அடைய முடியும். போதை பழக்கங்கள் ஆபத்துகள் உங்களை நெருங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் என்னவாக உருவாக வேண்டும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என உங்களை நீங்களே காட்சிப்படுத்திக் கொள்ளுங்கள். நன்கு படித்தவர்கள் உயர்ந்த பதவிகளை அடைந்துள்ளார்கள் என்பதை உணர்ந்து, உங்களுடைய உண்மை நிலைகளையும், உங்களுடைய கற்பனைகளையும், உங்களுடைய குறிக்கோளையும் அடைய தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளதை போல போதை பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிட நாமும் உறுதி ஏற்போம். தருமபுரி மாவட்டத்தை போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட அனைவரும் உறுதி ஏற்போம். இக்கருத்தரங்கில் ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்கள் கூறிய கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, உங்கள் வீட்டிற்கு அருகாமையிலேயோ, உங்கள் கவனத்திற்கோ ஏதேனும் ஒரு மாணவரோ, மாணவியரோ அல்லது கல்லூரியின் நண்பர்களோ போதைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதை அறிந்தால் அத்தகவலை ஆசிரியர்களுக்கோ அல்லது அலுவலர்களுக்கோ உடனடியாக தெரிவியுங்கள். உடனடியாக இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (11.08.2022) நடைபெற்றதையொட்டி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக காணொளி காட்சி அரங்கில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.கலைச்செல்வன் இகாப., அவர்கள் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
இக்கருத்தரங்கில் தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப, முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், உதவி ஆணையர் (கலால்), திரு.ஆ.தணிகாஜலம், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.ராஜராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.வினோத், துணை காவல் கண்காணிப்பாளர் (கலால்) திரு.இராஜசோமசுந்தரம், ரோட்டரி கிளப் மாவட்ட பயிற்சியாளர் Rtn.ஏ.கே.நடேசன், சேலம் நியூரோ பவுண்டேசன், சிறப்பு மனநல மருத்துவர் மரு.என்.ஞானமணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியமான் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 1,000-த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.