Type Here to Get Search Results !

விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கான அரசின் முக்கிய அறிவிப்பு.

நம் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்கவும், விசைத்தறியாளர்கள் மற்றும் துணி ஆலைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து கைத்தறியாளர்களை பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மத்திய அரசு கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் 1985 இயற்றப்பட்டு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை விவகார எல்லையாகக் கொண்டு உதவி அமலாக்க அலுவலர் அலுவலகம், சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு 5-ன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீடுகளுடன் 11 இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்திட தடை செய்யப்பட்டுள்ளது. கைத்தறி இரக ஒதுக்கீடு ஆணை அறிவிப்பு எண் S.O.No.2160(E) நாள் :03.09.2008-ன் படி பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை இரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்த இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி இரக ஒதுக்கிடு சட்டம் 1985-ன் படி தண்டனைக்குரிய செயலாகும். கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த இரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். 

ஆய்வின்போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த இரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும். நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆறு மாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை வழங்கப்படும். எனவே தருமபுரி மாவட்ட விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்கவும், நீதிமன்ற அபராதம் மற்றும் சிறை தண்டனையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டும்.

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை இரகங்கள் குறித்து விளக்கம் பெற சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நான்காம் தளம், 408-ல் இயங்கி வரும் உதவி அமலாக்க பிரிவு அலுவலகத்தையோ அல்லது தொலைப்பேசி மூலமாகவோ (0427-2417745) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies