Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் 7,560 விவசாயிகளுக்கு ரூ.6,245.38 இலட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண் பெருமக்கள் அளிக்கின்ற மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு உடனடி தீர்வு கண்டு, மனுக்கள் மீதான தீர்வுகளை / பதிலுரைகளை வேளாண் பெருமக்களுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவு.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (26.08.2022) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தலைமையேற்று விவசாயிகளின் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டறிந்து பேசும்போது தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனிற்காகவும், விவசாயத்தை மேம்படுத்துவதற்கும். நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து. விவசாயிகள் அதிக மகசூல் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. விவசாய பெருமக்களும் அத்தகைய திட்டங்களில் தங்களுக்கு தகுதியான, தேவையான திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறுவதோடு. அரசின் அனைத்து விதமான திட்டங்களும், அனைத்து விவசாயிகளும் பெறுகின்ற வகையில் வேளாண் பெருமக்களும் உதவிட வேண்டும்.

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வாகனத்துடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் தென்னை சாகுபடிப்பகுதிகளில், அதிக மரங்களில் எளிதாக தேங்காய் பறிக்க இயலும். இவ்வியந்திரம் வேலையாட்கள் கொண்டு தேங்காய் பறிப்பதை விட பாதுகாப்பானது. இந்த இயந்திரம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த வடகை அடிப்படையில் மணிக்கு ரூ.650/- என்ற வீதத்தில் விவசாமிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தேவைப்படும் விவசாயிகள் குறைந்தது. இரண்டு மணி நேரத்திற்கான தொகையை செயலியில் வீட்டிலிருந்தவாறே அல்லது தங்கள் பகுதியிலிருந்தே பதிவு செய்து கொள்ளலாம். 

அவ்வாறு பதிவு செய்யவர்களில் முன்னுரிமை அடிப்படையில் இவ்வியந்திரம் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி உரிய தொகையினை செலுத்துபவர்களுக்கு வாடகைக்கு வழங்கப்படும். தேவைப்படும் விவசாயிகள் இவ்வியந்திரத்தினை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு தருமபுரி வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலக தொலைபேசி எண் 04342-296132 மற்றும் அரூர் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலக தொலைபேசி எண் 04346-296077 ஆகிய அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

தமிழ்நாடு அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவு சிறுதானியங்கள் சாகுபடி செய்வதால் சிறுதானியங்கள் உற்பத்தியினை அதிகப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு தருமபுரி மாவட்டத்தை சிறுதானியங்கள் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சிறு தானிய உற்பத்தியை அதிகப்படுத்திட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட்-2021 வரை 492.4 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட்-2022 வரை 592.97 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. 

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு 1,67,000 ஹெக்டேர் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 89,056 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு இந்த 2022- 2023 ஆம் ஆண்டிற்கு 752.60 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதம் வரை 180.46 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 240.09 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி சான்று விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தேவையான சான்று விதைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர உரத்தேவை 43800 மெட்ரிக் டன் உரத்தேவை என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் காரீப் பருவம் 2022-ல் 22300 மெட்ரிக் டன் உரமும், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 3260 மெட்ரிக் டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 8423 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்கள் 2022-23 ஆம் ஆண்டிற்கு 30,000 எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு மாதம் முடிய 12,862 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. 5,982 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு 93,873 ஹெக்டர் பழங்கள், காய்கறிகள், வாசனை பயிர்கள், மலைப்பயிர்கள், மருத்துவ மற்றும் நறுமண பயிர்கள், பூக்கள் உள்ளிட்ட பயிர் சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 40,855 ஹெக்டர் பரப்பளவில் பழங்கள், காய்கறிகள், வாசனை பயிர்கள், மலைப்பயிர்கள், மருத்துவ மற்றும் நறுமண பயிர்கள், பூக்கள் உள்ளிட்டவை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

மேலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாயி யோஜனா நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 2022-2023- ஆம் ஆண்டிற்கு 6,100 ஹெக்டர் பரப்பளவில் இலக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு சொட்டு நீர் பாசனம் மிக மிக பயனுள்ளதாக இருக்கும். எனவே விவசாயிகள் அரசு மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு முன்வர வேண்டும். கூட்டுறவுத்துறையின் சார்பில் 31.07.2022 வரை தருமபுரி மாவட்டத்தில் 7,560 விவசாயிகளுக்கு ரூ.6,245.38 இலட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில் மான்யத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை விவசாய பெருமக்கள் பெற்று முழுமையாக பயன்படுத்திக்கொண்டு வேளாண் உற்பத்தியை பெருக்கி, அதிக வருவாய் ஈட்டி தங்களின் வாழ்க்கை தரத்தையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டும். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண் சார்ந்த கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, விவசாயிகள் வேளாண்மை சார்ந்த கோரிக்கைகளை மனுக்களாக வழங்கிட வேண்டும். பொதுப்பிரச்சனைகள், வேளாண் சாராத பிரச்சனைகள் குறித்த கோரிக்கைகள் வாரந்தோறும் நடைபெறுகின்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கிடலாம். 

எனவே இக்கூட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் என்பதால் வேளாண் சார்ந்த கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, விவாதிப்பதற்கும், மனுக்களாக அளிப்பதற்கும் விவசாயிகள் முன்வந்தால், இக்கூட்டத்தில் மேலும் பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை நாம் பகிர்ந்து கொள்வதோடு, வேளாண் சார்ந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு உடனடி தீர்வு காண்பதற்கும் ஏதுவாக இருக்கும். எனவே, இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய பெருங்குடி மக்கள் வேளாண் சார்ந்த கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கும், மனுக்கள் அளிப்பதற்கும் முன்னுரிமை அளித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண் பெருமக்கள் அளிக்கின்ற மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு உடனடி தீர்வு கண்டு, மனுக்கள் மீதான தீர்வுகளை / பதிலுரைகளை வேளாண் பெருமக்களுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.இரா.விஸ்வநாதன், தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு.முகமது அஸ்லாம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.இராமதாஸ், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.ஆர்.சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.மாது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.மாலினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) திரு.வி.குணசேகரன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies