Type Here to Get Search Results !

ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்திற்கு 4800 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த ஆய்வு நடைபெற்று வருகிறது - மரு. செந்தில்குமார் பேட்டி.

தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை அமைப்பதற்கான அளவீட்டுப் பணி நடைபெற்று வருவதை மொரப்பூர்  ராணிமூக்கனூர் அருகே தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை இணைப்புத்திட்டம் தொடர்பாக மத்திய அரசு அளவீட்டுப் பணிகளுக்கு நிதியை ஒதுக்கியுள்ளது. தற்போது அளவீட்டுப்பணிகள் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு 13 அலுவலர்கள் அடங்கிய சிறப்புக்குழுவினரை நியமித்து, அவர்களுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அளவீட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இறுதியில் இப்பணிகள் நிறைவடையும். அதற்குப்பின் மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியின் மூலம் இணைப்புப்பாதை பணிகள் தொடங்கும். அளவீட்டுப் பணிகளுக்கான டெண்டர் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

ஏற்கெனவே இணைப்புப்பாதை இருந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்தத்திட்டத்தின் சிறப்பான பயன்களைக் கருதி திட்டத்தை நிறைவேற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் தருமபுரி வட்டப்பகுதிகளில் அளவீட்டுப் பணிகளுக்காக சிறப்பு அலுவலர்களின் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் தற்போது முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவிரி உபநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்திய நடை பயணத்திற்கு போதிய மக்கள் ஆதரவு இல்லை. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தற்போது தான் தருமபுரி வந்துள்ளார். எழுச்சி இருந்திருக்க வேண்டும். ஆனால் எழுச்சி இல்லை. அன்புமணி ராமதாஸ் புரிதல் இல்லாமல் வந்திருக்கிறார்.

ஏற்கெனவே 4800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அமைச்சர் துரைமுருகன் உத்திரவாதம் அளித்துள்ளார். இத்திட்டம் முதலமைச்சர் பார்வையில் உள்ளது. சில சட்ட சிக்கல்கள் உள்ளன. திட்ட மதிப்பீடு தயாரிக்கும் நிலையில் உள்ளது. மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் மூலம் இரண்டாவது குடிநீர் திட்டப்பணிகளுக்கு 4500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுப் பணிகள் தொடங்கும் தருவாயில் உள்ளது.

இதேபோன்று காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்த அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்ட ரீதியில் இது போன்ற திட்டங்களை நிறைவேற்றினால் தான் பிற்காலத்தில் எந்தவிதப் பிரச்னைகளும் இல்லாமல் இருக்கும்" எனப் பேசினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies