தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் மூன்று நாட்கள் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவை இன்று (02.08.22) மாநில வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர். "தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், தமிழக முதல்வர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் நிறைவேற்றப்பட்டது. நிலத்தடி நீரில் புளோரைடு அதிக அளவில் உள்ள காரணத்தால் இந்த தண்ணீரை பருகும் மக்களுக்கு புளோரசிஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், இதை குறைப்பதற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்போது மக்களின் கூடுதல் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்கின்ற வகையில் 4,500 கோடி ரூபாய் மதிப்பில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பகுதி இரண்டு, மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்க மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் நிறைவேற்றப்படும் தருவாயில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு கூடுதல் குடிநீர் கிடைக்கும், இத்திட்டத்துக்கு என 200 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும், காவிரி ஆற்றின் குறுக்கே தருமபுரி- சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ஒட்டனூர்- கோட்டையூர் இடையே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 250 கோடி மதிப்பில் இத்திட்டம் நிறைவேற்ற திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பாலம் அமைப்பதன் மூலம் பெங்களூரில் இருந்து மேட்டூர், ஈரோடு, கோவை மற்றும் கேரள மாநிலத்திற்கு எளிதில் செல்ல இயலும். தருமபுரி மாவட்டத்தின் பின் தங்கிய பகுதியாக உள்ள பென்னாகரம், நெருப்பூர் பகுதிகள் வளர்ச்சி அடையும்.
வெள்ளப்பெருக்கு காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செல்லும் உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பும் காவிரி உபரி நீர் திட்டம் நிறைவேற்ற அரசு முனைப்புடன் உள்ளது. ஏற்கனவே வேளாண்மை, தோட்டக்கலை, மலைப் பயிர் சாகுபடிகளில் சிறந்து விளங்கும் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு இது திட்டம் கூடுதல் பயன் அளிக்கும்.
பிளாஸ்டிக் பயன்பாட்டால் மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக உலக அளவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு முன்மாதிரியாக பிளாஸ்டிக் பைகளை ஒழித்து அதற்கு பதில் மஞ்சள் துணி பைகளை உபயோகிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட வேண்டும். தற்போது தமிழர்களின் சிறப்பு மிக்க விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் தருவாயில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 70 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை உணர்ந்து சுற்றுலாவை நம்பி உள்ள தொழிலாளர்கள் பொறுமை காக்க வேண்டும். என்றார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த பல்துறை பணி விளக்க கண்காட்சியையும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 4522 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.
விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், சார் ஆட்சியர் சித்ரா விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று (02.08.22)முதல் நாளை மறுநாள் (04.08.22)வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஆடிப்பெருக்கு விழாவில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டு துறை, பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

