தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தன. தமிழகத்தின் காவிரி கரையோர பகுதிகளிலும் வனப் பகுதிகளிலும் பெய்த கனமழையின் காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நேற்று காலை நேரத்தில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை நேரத்தில் அதிகரித்து விநாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட பிரதான அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிச் செல்கின்றன. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் இன்றும் தொடர்ந்து 22வது நாட்களாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடையால் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

