அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள். கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குநர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்ப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இக்கிராம சபை கூட்டத்தில் கீழ்கண்ட பொருள்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது:-
- கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விரிவாக விவாதித்தல்.
- இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆம் ஆண்டினை போற்றும் வகையில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா" கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக" அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி" எனும் இயக்கத்தின் மூலம் சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகம் மற்றும் தேசிய கொடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- தமிழக அரசால் 15-ஆகஸ்ட்- 2022 முதல் 2-அக்டோபர்- 2022 வரை, தனி நபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மையை மையப்படுத்தி 'எழில்மிகு கிராமம்' என்ற சிறப்பு பிரசாரம் ஒருங்கிணைந்த முயற்சியுடன் பல்வேறு துறைகள் மற்றும் சமூக பங்கேற்புடன் மேற்கொள்ளுதல் குறித்து விவாதித்தல்.
- ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்த்தல், பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை தடைசெய்தல் மற்றும் மாற்று பொருட்களை பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து விவாதித்தல்.
- "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II" 2022-23 ஆம் ஆண்டிற்கான ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து விவாதித்தல்.
- "கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010" மறு-கணக்கெடுப்பு குறித்து விரிவாக விவாதித்தல்.
- "ஜல் ஜீவன் இயக்கத்தின்" கீழ் கிராம ஊராட்சிகளில் நூறு சதவிகிதம் (100%) அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு 'வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி" என கிராம சபையில் சான்றிதழ் வழங்குதல்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சாத்தியமான பணிகள் குறித்து விவாதித்தல் மற்றும் 2022-23 ஆம் ஆண்டுக்கான, தொழிலாளர் வரவு செலவு திட்டத்தினை, ஜூலை 31 ஆம் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதித்தல்
- ஊரக பகுதிகளில் "பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்" கீழ் பயன்பெறும் பயனாளிகள் குறித்தும், பயன்பெற வேண்டிய பயணாளிகள் குறித்தும் விரிவாக விவாதித்தல்.
- சிறுபான்மையினர் விவகாரத் துறையின் மூலம் வழங்கப்படும் "கல்வி உதவித் தொகை" குறித்து விவாதித்தல்.
- பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டை (PHH) பயனாளிகளின் பட்டியல் குறித்து விவாதித்தல்.
- ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாற்றத்தினை பொது மக்கள் அறியும் வகையில் கிராம சபையில் வைத்தல்.
- வறுமை குறைப்பு திட்டம் தொடர்பாக விரிவாக விவாதித்தல்.
- இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் பயிற்சியளிக்கும் அரசுத் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, நடத்தப்படும் 'இளைஞர் திறன் திருவிழாக்கள்' குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தல்.
- வேளாண்மை உழவர் நலத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து திட்டங்கள் குறித்து விவாதித்தல்.
- குழந்தைகள் அவசர உதவி எண் (Child Help Line) 1098 மற்றும் 14417 என்ற எண்களை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவும், பயன்படுத்துதல் குறித்தும் விவாதித்தல்.
- மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி செய்யூம் வகையில் அனைவரும் அறிந்துகொள்ள ஏதுவாக முதியோர் உதவி அழைப்பு எண். 14568-ஐ பயன்படுத்துதல் குறித்து விவாதித்தல்,
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
