கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது வினாடிக்கு 34,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. அதேபோல தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் வனப்பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக வரும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது.
இதனால் பிலிகுண்டுளுவில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து தற்போது வினாடிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடி நீர் வந்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள சினி ஃபால்ஸ், மெயின் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. காவிரி வனப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதித்து, சுற்றுலா பயணிகளும், பொதுமக்கள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


