Type Here to Get Search Results !

விவசாயிகளுக்கு சிறுவிடை நாட்டுக்கோழிகளின் பராமரிப்பு மற்றும் வேளாண்மை பயிற்சி.

தருமபுரி, குண்டலபட்டியிலுள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், சிறுவிடை நாட்டுக்கோழி வளர்க்கும் 24 விவசாயிகளுக்கு, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் "சிறுவிடை நாட்டுக்கோழிகளின் பராமரிப்பு மற்றும் வேளாண்மை" என்ற தலைப்பிலான திறன் மேம்பாட்டு பயிற்சி 18.07.2022 முதல் 21.07.2022 வரை நடத்தப்பட்டது.

தற்பொழுது எண்ணிக்கையில் குறைந்து வரும் சிறுவிடை நாட்டுக்கோழிகளின் இன தூய்மையைப் பாதுகாத்து, அவற்றின் எண்ணிக்கை, நலன், உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இப்பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் தமிழ்நாட்டில் உள்ள நாட்டுக்கோழி இனங்கள், கோழிகளுக்கு கொட்டகை அமைத்தல், தீவன மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, நோய் மேலாண்மை, உயிர் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் கால்நடைகளுடன் சேர்த்து சிறுவிடை நாட்டுக்கோழிகளை வளர்க்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து செயல் விளக்கங்களுடன், பயிற்சி அளிக்கப்பட்டு, விவசாயிகள்-விஞ்ஞானிகள் கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.

ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி நிலைய தலைவர் முனைவர் வசந்தகுமார் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்த இப்பயிற்சியில், பேராசிரியர்கள் முத்துசாமி, கண்ணதாசன், பாலமுருகன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

இப்பயிற்சியின் தொடர்ச்சியாக, 22.07.2022 மற்றும் 23.07.2022 ஆகிய தேதிகளில், திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர், பேராசிரியர் ரிச்சர்ட் சர்ச்சில் அவர்கள் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு, பயிற்சி பெற்ற விவசாயிகளின் கோழிப்பண்ணைகளுக்கு நேரடியாக சென்று, பண்ணைகளைப் பார்வையிட்டது. 

பின்னர், நாட்டுக்கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு பேராசிரியர் ரிச்சர்ட் சர்ச்சில் அவர்கள் பரிந்துரைத்ததாவது: "நாட்டுக்கோழிகளை வளர்க்கும் விவசாயிகளும், புதிதாக வளர்க்க முனையும் விவசாயிகளும் தாங்கள் எத்தகைய நாட்டுக்கோழி இனங்களை வளர்க்க வேண்டும்.

என்பதை தீர்மானித்து, கோழி இனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக சிறுவிடை நாட்டுக்கோழிகளை முட்டை உற்பத்திக்காகவும், பெருவிடை நாட்டுக்கோழிகளை இறைச்சி உற்பத்திக்காகவும் வளர்க்க வேண்டும். இந்த இரண்டு கோழி இனங்களையும் தனித்தனியே முறையாக பராமரித்து, இனக்கலப்பு ஏற்படாமல், கோழிகளின் இனத் தூய்மையைப் பாதுகாப்பதால், வருவாய் பெருகுவதோடு, நாட்டுக்கோழிகளின் மரபியல் வளமும் பாதுகாக்கப்படும்".

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies