ஏரியூர் அருகே இராம கொண்ட அள்ளி ஊராட்சிக்குட்பட்ட மலையனூரில் ஸ்ரீ பெரிய மாரியம்மன், ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த இரண்டு கோயில்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. இந்த கோயில்களில் பகல் நேரத்தில், இந்த பகுதி மக்கள் ஓய்வெடுப்பது வழக்கம். ஆனால் இரவு நேரங்களில் இங்கே யாரும் தங்குவதில்லை.
இந்நிலையில் நேற்று காலை பொதுமக்கள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கோயிலின் முன்புறத்தில் இருந்த 25 கிலோ எடை உள்ள ராட்சத ஆலயமணியைக் காணவில்லை. மேலும் பூஜை சாமான்களும் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதேபோல அருகில் இருந்த பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்த, நான்கு ஆலயமணிகளும் திருடு போயிருந்தது, இது குறித்து ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு கோவில்களில் பூட்டை உடைத்து பணம் நகை திருடு போயிருந்தது, மேலும் கடந்த மூன்று மாதத்தில் சுமார் 10 கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் நகை கொள்ளை நடந்துள்ளது. ஏரியூர் பகுதியில் தொடர்ந்து கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வரும் சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

