பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World nature Conservation Day) தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நாளையொட்டி மாணவர்களிடையே இயற்கையை பற்றிய புரிதல் உண்டாக்குவதற்கும் இயற்கையை நாம் பாதுகாத்தால் தான் இயற்கை நம்மை பாதுகாக்கும் என்பதை உணர்த்துவதற்காகவும் இயற்கை சார்ந்த கருத்துக்கள் கலந்துரையாடல் மூலம் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்த பூமி மனிதர்கள் மட்டும் வாழ்வதற்கு சொந்தமானது அல்ல அனைத்து உயிரினங்களுக்கும் ஆனது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது, இந்த பூமியை பாதுகாப்பாக அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பது ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தலைமை ஆசிரியர் மா. பழனி மாணவர்களுக்கு விளக்கினார்.
இந்த நாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, திலகவதி மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

