சென்னையில் இருந்து மேட்டூருக்கு சுண்ணாம்பு கல் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்தது. லாரியை விருத்தாசலம் பகுதியை சேர்ந்த சார்லஸ் (வயது 41) என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சுண்ணாம்பு கல் பார கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற மற்றொரு லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுண்ணாம்பு கல் பார லாரி டிரைவர் விபத்தில் சிக்கி தவித்தார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து விபத்தில் சிக்கி தவித்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

