ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டத்திற்கு ஒரு டேங்கர் லாரி சென்றது. தருமபுரி அருகே தொப்பூர் பகுதியில் நள்ளிரவு 12 மணிக்கு லாரி சென்றபோது திடீரென நிலை தடுமாறி எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதியது. இதில் அந்த கார் சாலையோரம் கவிழ்ந்தது. இதையடுத்து டேங்கர் லாரி முன்னாள் சென்ற பஸ் மீது மோதிவிட்டு சாலைநடுவில் கவிழ்ந்தது.இதனால் டேங்கர் லாரியில் இருந்து சமையல் எண்ணெய் ஆறாக ஓடியது.
இந்நிலையில் இதே சாலையில் ஊட்டிக்கு விறகு ஏற்றி சென்ற மற்றொரு லாரி கவிழ்ந்த டேங்கர் லாரி மீது மோதியது. இந்த அடுத்தடுத்த மோதலில் ரமணன், நரசிம்மய்யா ஆகிய 2 டிரைவர்கள் காயமடைந் தனர். அவர்கள் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். விபத்து பற்றிய தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் தொப்பூர் மலைப்பாதையில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக சென்ற 6,693 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இ-சலான் மூலம் ரூ.40½ லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இந்த விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்த விபத்துக்களை தடுக்க வளைவு பகுதிகளில் பேரிக்காடு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துக்கள் தொடர்ந்து வருகிறது. தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் தொப்பூர் மலைப்பாதை இறக்கம் என்பதால் வாகனங்களை டிரைவர்கள் வேகமாக இயக்குகிறார்கள். இதனால் அடிக்கடி லாரிகள் விபத்துக்களில் சிக்குகிறது. அதிலும் பெரும்பாலான வாகனங்கள் கனரக வாகனங்கள் தான் விபத்தில் சிக்குகின்றன. இதனை தடுக்க வட்டார போக்குவரத்து துறை சார்பில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய 4 வழிச்சாலையாக தர்மபுரி மாவட்டம், தொப்பூர் மலைப்பாதை சாலை உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்தால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிகளவில் இறந்துள்ளனர். இதை தடுக்கும் வகையில், சாலைகளில் தடுப்பு, வேகத்தை குறைக்க எச்சரிக்கை பலகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2021 ஜூன் மாதம் வரை இப்பகுதிகளில் 8 பேர் மட்டும் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொப்பூர் மலைப்பாதையில் உயிரிழப்பை தடுக்கும் வகையில் மலைப்பாதையான வெள்ளக்கல்லில் இருந்து தொப்பூர் வரை 30 கி.மீ.க்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில், ஸ்பீடு ரேடார் கன்னை இப்பகுதியில் கடந்த 2021 ஜூன் மாதம் 28-ந் தேதி அமைத்தோம். இதன் மூலம் 2022 ஜூன் மாதம் 30-ந் தேதி வரை இப்பகுதியில் 30 கி.மீ.க்கு மேல் அதிவேகமாக சென்ற 6,693 வாகனங்களுக்கு இ-சலான் மூலம் ரூ.40 லட்சத்து 60 ஆயிரத்து 25 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் 1,411 வாகன உரிமையாளர்கள் ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 600-ஐ அபராதமாக செலுத்தி உள்ளனர். நாடு முழுவதும் சாலைபோக்குவரத்து துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் தொப்பூர் பகுதியில் அதிவேகமாக வாகனங்களை இயக்கியவர்கள், அதற்கான அபராத தொகையை செலுத்தாவிட்டால், தங்களது பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும் போது கூடுதல் அபராதத்துடன் தொகையை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வாகனங்களை இயக்க முடியாது. எனவே, தொப்பூர் மலைப்பாதையில் வாகனங்களை இயக்குபவர்கள், அறிவிப்பு பலகைகளில் உள்ளது போல், 30 கி.மீ. வேகத்துக்குள் வாகனங்களை இயக்கி விபத்துக்களை தடுப்பதுடன், அபராதம் செலுத்துவதையும் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.