தருமபுரி, அக். 27 -
தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 61-வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி விழா கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, யாகசாலை பூஜைகள், கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. யாகசாலையில் இருந்து புனிதநீர் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆறு நாட்கள் தொடர்ந்து லட்சார்ச்சனை மற்றும் திருமுறை பாராயணங்கள் நடைபெற்றன. பக்தர்கள் மிகுந்த பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். சூரசம்ஹார விழா விழாவின் முக்கிய நிகழ்வாகிய சூரசம்ஹார திருவிழா, நேற்று இரவு தங்க மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தங்க மண்டபத்தில் சுப்பிரமணிய சாமியும் சூரபத்மனும் புறப்பாடாக வந்து, பைபாஸ் சாலையில் உள்ள சாமி நிலத்தில் வானவேடிக்கையுடன் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி பக்தர்களிடையே ஆனந்தத்தை ஏற்படுத்தியது.
பின்னர் மகா தீபாரதனை, உபகார பூஜைகள் நடைபெற்றன. “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்ற கோஷத்துடன் பக்தர்கள் ஆரவாரம் செய்து சாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 12 மணிக்கு சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பூர்த்தி ஹோமம் நடைபெறவுள்ளது. மாலை 4 மணிக்கு இடும்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இரவு 8 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், பின்னர் பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, விழா குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

.jpg)