![]() |
மாதிரி கோப்பு படம். |
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20000 கன அடியாக அதிகரித்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக விட்டுவிட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரத்து 511 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டன.
கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த உபரி நீர் இரண்டு நாட்களுக்குள் தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று முதல் அதிகரிக்க தொடங்கி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தற்போது 20ஆயிரம் கனஅடியாக உள்ளது. மேலும் கர்நாடக அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று இரவு நேரத்தில் விநாடிக்கு 73 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டன.
இந்த நீர் வரத்தானது நாளை காலை நேரத்திற்குள் தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால் பிரதான அருவி, மெயின் அருவி, சினி ஃபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, படகு சவாரி செய்யவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பொதுமக்களின் நலன் கருதி முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் வருவாய்த்துறை காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.