சென்னை, மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்திற்கு வரப்பெற்ற மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதி (Chess Olympiad Symbolic Torch) குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (26.07.2022) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் முன்னிலை வகித்தார். சென்னை, மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் குறித்தும், "நம்ம செஸ் நம்ம பெருமை" என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதி (Chess Olympiad Symbolic Torch) வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதி (Chess Olympiad Symbolic Torch) கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் பெறப்பட்டு, தருமபுரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பெற்றது.
இதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்ட மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து, தருமபுரி மாவட்டத்திற்கு வரப்பெற்ற மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதி (Chess Olympiad Symbolic Torch) குறித்த விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (26.07.2022) நடைபெற்றது.
இதனையொட்டி, தருமபுரி மாவட்டத்திற்கு மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரப்பெற்றதை பெருமை கொள்ளும் விதமாக, தருமபுரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை ஒளியேற்றி, தடகள வீரர் திரு.பி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்கள். ஒளியேற்றப்பட்ட மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை தடகள வீரர் ஏந்தி சென்று, பிற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளிடம் வழங்கி அனைத்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளும் இணைந்து ஒளியேற்றப்பட்ட மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதியுடன் மாவட்ட விளையாட்டு மைதானத்தை வலம் வந்து, மீண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை ஒப்படைத்தனர். அதனை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்லைவர் அவர்கள் ஒளியேற்றப்பட்ட மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை அனைவரின் பார்வைக்காக காட்சிப்படுத்தினார்கள்.
பின்னர் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் குறித்தும், "நம்ம செஸ் நம்ம பெருமை" என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் செஸ் ஒலிம்பியாட் சின்னம் பொறிக்கப்பட்ட வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டனர்.
இந்நிகழ்ச்சியினை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தருமபுரி கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 6-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி எஸ்.வி.ஸ்ரீஹனு அவர்களின் வரவேற்பு நடனமும், தருமபுரி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 8-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஹரிணி அவர்களின் வண்ணமிகு நாட்டுப்புற கலைநிகழ்ச்சியும், தருமபுரி மாவட்டம், நல்லாம்பட்டியில் உள்ள தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளியின் சார்பில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மல்லர் கம்பம், கையிறு மல்லர் கம்பம், சிலம்பம் மற்றும் தொங்கும் இழை உள்ளிட்ட பல்வேறு சிறப்புமிக்க கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதனைதொடர்ந்து, சென்னை, மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகளில் பங்கேற்க உள்ள 188 நாடுகளின் பெயர்களை நினைவுகூறும் வகையில் 188 நாடுகளின் பெயர்களை கொண்ட பதாகைகள் தாங்கிய மாணவர்கள், மாணவியர்களுக்கு 188 மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
பின்னர் இவ்விளையாட்டு மைதான வளாகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நினைவு கூறும் வகையில், மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள். மேலும், சென்னை, மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் குறித்து தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கும், மாணவியர்களுக்கும் தனித்தனியாக அரசு பள்ளிகள் அளவிலும், அதனை தொடர்ந்து, வட்டார அளவிலும் சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்று 8 கல்வி வட்டாரங்களிலும் மாணவர்களுக்கும், மாணவியர்களுக்கும் சதுரங்க போட்டி நடத்தப்பட்டன. இப்போட்டியில் பங்கேற்ற தேர்வுபெற்ற 144 மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனியே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 6-8ஆம் வகுப்பு, 9-10ஆம் வகுப்பு மற்றும் 11-12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான 3 வகையான பிரிவுகளில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டு, இம்மாவட்ட அளவிலான சதுரங்க இப்போட்டிகளில் 3 வகுப்பு பிரிவுகளில் வெற்றி பெற்று முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மொத்தம் 12 மாணவர்கள், மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் வெற்றி பெற்றதற்கான பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கி பாராட்டினார்கள்.
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற இந்த 12 மாணவ, மாணவியர்களும் சென்னையில் நடைபெற உள்ள 44- வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகளை நேரில் காணும் வாய்ப்பினை பெற்றுள்ளதால், அவர்கள் இன்று சென்னை புறப்பட்டு சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.பி.பாபு, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அண்ணாமலை, முதன்மைக்கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் திருமதி.மா.யசோதா, தருமபுரி நகர்மன்றத் தலைவர் திருமதி.மா.லட்சுமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திருமதி. தே. சாந்தி, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் திருமதி. சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் திரு. ஜெயசீலன், தருமபுரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு,கணேசன், தருமபுரி அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர். கே.பாலமுருகன், உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழர் தற்காப்பு கலை பயிற்சியாளர் திரு.ஜெ.சண்முகம் உள்ளிட்ட மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

