தருமபுரி மாவட்டம், தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் தருமபுரி நகராட்சியின் சார்பில் இன்று நடைபெற்ற என் நகரம், என் பெருமை - நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தொடங்கி வைத்து பேச்சு
தருமபுரி மாவட்டம், தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் தருமபுரி நகராட்சியின் சார்பில் என் நகரம், என் பெருமை நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் துவக்க நிகழ்ச்சி இன்று (03.06.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் அவர்கள், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.எம்.லட்சுமி நாட்டான் மாது அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தலைமையேற்று, என் நகரம், என் பெருமை நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை தொடங்கி வைத்து, தூய்மை உறுதிமொழியான "என் நகரம் என் பெருமை. என் நகரத்தைத் தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும், பொறுப்புமாகும்.
பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே நகரத் தூய்மைக்கான முதற் காரணம் என்பதை நான் நம்புகிறேன். தூய்மைப் பணிகளுக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்ள என் நேரத்தை ஒதுக்குவேன். நான் பொது இடங்களில் குப்பை கொட்ட மாட்டேன். பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைப்பேன். தூய்மை நகருக்கான முயற்சியில், நான் பங்கேற்பதுடன், என் குடும்பத்தாரையும். சுற்றத்தாரையும் முழு ஆர்வத்துடன் பங்கேற்க ஊக்குவிப்பேன். என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் என் நகரத்தைத் தூய்மையாக வைக்கப் பேருதவி செய்யும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்ற உறுதிமொழியினை வாசிக்க இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் (Cleanliness drive) நடத்த "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் (People's Movement for Clean Cities)" தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தத் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமை படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி இன்று முதல் என் நகரம், என் பெருமை நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தொடங்கிட அரசு உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் இன்று தருமபுரி நகராட்சி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளிலும் இம்மாபெரும் மக்கள் தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கமானது தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் 2-ஆம் மற்றும் 4-ஆம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
நாம் ஒரு நிகழ்ச்சி நடத்தினால் அந்நிகழ்ச்சி முடிவுற்ற பிறகு நிறைய குப்பைகள் சேர்கின்றது. அதுபோல தான் ஒவ்வொரு பகுதியிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடந்தால் எவ்வளவு குப்பைகள் சேரும் என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். குப்பைகளை கண்டால் நாம் முகம் சுளித்து செல்கின்றோம். ஆனால் அந்த குப்பைகளை போடுவது நம்மை போன்றவர்கள் தான் என்பதை உணர மறுக்கின்றோம். குப்பைகள் அதுவாக சேருவதில்லை. நாம் குப்பைகளை உருவாக்குகின்றோம். நம் வீடுகளில் உள்ள குப்பைகளை அப்படியே வெளியில் கொண்டு வந்து போட்டு விட்டு, நம் வீட்டை சுத்தமாக்குகின்றோம்.
ஆனால், நாம் அவ்வாறு குப்பை கொட்டுகின்ற இடமும் நமக்கானது தான் அந்த இடத்தையும் நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுகின்றோம். தெருவில் குப்பை போடுகின்ற நாம் பெருமையாக நடக்கின்றோம். ஆனால் நாம் போடுகின்ற குப்பைகளை சுத்தப்படுத்துகின்ற தூய்மை பணியாளர்களை வெறுப்பாக பார்க்கின்றோம். நாம் கொட்டுகின்ற குப்பைகளை சுத்தப்படுத்தி அந்த இடத்தை தூய்மையாக்குகின்ற உன்னத பணியை மேற்கொண்டு வருகின்ற தூய்மை பணியாளர்களை பெருமைபடுத்திடுவதோடு, நாம் போற்றி பாதுகாத்திட வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது நம் வீடுகளில் சேருகின்ற குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
அதேபோல் ஈரப்பதமுள்ள குப்பைகள், ஈரப்பதமில்லாத குப்பைகள் என அதையும் தரம் பிரித்து வழங்க வேண்டும். அப்போது தான் இப்பணியாளர்களுக்கு வேலைச்சுமையும் குறையும். பிரித்து வழங்குகின்ற குப்பைகளையும் தரம் பிரிப்பதற்கு எளிதாக இருக்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முன்பெல்லாம் நாம் கடைகளுக்கு செல்லும் பொழுது பொருட்களை வாங்குவதற்கு கையில் துணிப்பைகளோடு செல்வோம். தற்போது இந்நிலை மாறி கையில் பைகள் இன்றி கடைக்கு சென்று பொருட்களை வாங்கி, கேரிபேக்குகள் போன்ற பிளாஸ்டிக் பைகளில் எடுத்து வருவதை கவுரமாக நினைக்கின்றோம். இதுபோன்ற பிளாஸ்டிக்குகள் மக்குவதற்கு ஏறத்தாழ 240 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இன்று நாம் செய்கின்ற இத்தவறு நம்முடைய மூன்றாவது தலைமுறைக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்பதை நாம் உணர மறந்து விடுகின்றோம். நாம் நலமாக இருந்தால் போதும் என்று நினைக்காமல் நம் எதிர்கால சந்ததியும் நலமாக இருக்க வேண்டும்.
இயற்கையும் பாதிக்காமல் இருக்க வேண்டும். மண்ணும் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்பதை நாம் மனதில் கொண்டு இன்று முதல் ளாஸ்டிக் பயன்படுத்துவதை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். முன்பை போலவே துணிப் பைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் மஞ்சள் பை என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளதை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் மீண்டும் மஞ்சள் பை என்பதை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
எனவே இன்று முதல் துணிப்பைகளை பயன்படுத்துவோம் என உறுதியேற்போம். மற்றவர்களையும் துணிப்பைகளை பயன்படுத்த வலியுறுத்துவோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்போம். குப்பையில்லாத தருமபுரி நகரத்தையும், குப்பையில்லாத தருமபுரி மாவட்டத்தையும் உருவாக்கிட அனைவரும் என் நகரம், என் பெருமை நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க தொடக்க நாளான இன்று முதல் உறுதி ஏற்போம். அதேபோல் நம் வீடுகளில் உள்ள குப்பைகளை கட்டாயம் தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். மலும் இது குறித்த விழிப்புணர்வை நம்மை சார்ந்தவர்கள், உற்றார், உறவினர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் தொடர்ந்து ஏற்படுத்திடுவோம் என்ற உறுதியினையும் ஏற்போம். எனவே, குப்பையில்லா நகரமாக தருமபுரி நகராட்சியை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதோடு, குப்பைகளை பொதுமக்கள் கட்டாயம் தரம் பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, மீண்டும் மஞ்சள் பை என்பதற்கிணங்க அனைவரும் துணிப்பைகளை பயன்படுத்த முன்வர வேண்டும்என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் பொதுமக்களுக்கு குப்பை தரம் பிரிக்கும் கூடைகளையும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துணிப்பைகளையும், விவசாயிகளுக்கு நகராட்சியின் மூலம் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களையும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஜி.சேகர், நகராட்சி ஆணையாளர் திருமதி.சு.சித்ரா, நகராட்சி பொறியாளர் திரு.ஜெயசீலன், தருமபுரி வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன், தருமபுரி நகர மன்ற துணைத்தலைவர் திருமதி.அ.நித்யா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், தூய்மைப்பணியாளர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

