அரூரில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி திடீர் ஆய்வு மேற்கொண்டார், அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிளை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் இருந்து பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்த கிடங்கில் இருந்து அரூர் வட்டாரப் பகுதியில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில், அரூர் கிளை கிடங்கில் உள்ள ரேஷன் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு விவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் எடை குறைதல், இருப்பு வைப்பதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. மேலும், மாதத்தின் முதல் வாரத்துக்கு தேவையான உணவுப் பொருள்களை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருள்களை உரிய நேரத்தில் தாமதமின்றி அனுப்ப வேண்டும்.
அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களில் எடை குறைதல் உள்ளிட்ட முறைகேடுகள் செய்தல் கூடாது என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் சி.கனிமொழி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தார். முன்னதாக, அரூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

