தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு "எண்ணும் எழுத்தும்" என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் இன்று (08.06.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் இப்பயிற்சி முகாமில் பங்கு பெற்றிருந்த பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகளிடம் பேசும்போது தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டம் முந்தைய காலக்கட்டங்களில் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது கல்வித்துறையில் அரசு செயல்படுத்தி வருகின்ற பல்வேறு திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறைகளின் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை உயர்ந்து கல்வியில் சிறந்த மாவட்டமாக தருமபுரி மாவட்டம் விளங்கி வருகின்றது. அத்தகைய சிறப்பு வாய்ந்த நமது மாவட்டத்தில் மேலும் கல்வியில் சிறப்பு பெற்றிடவும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் மிகச் சிறந்த உருவாக்குவதற்கும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் அர்பணிப்பு உணர்வோடும், மிகுந்த ஆர்வத்தோடும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர் சேர்க்கையை அனைவரும் உறுதி செய்திட வேண்டும்.
"எண்ணும் எழுத்தும்" என்ற வட்டார அளவிலான சிறப்பு பயிற்சி முகாம் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூர், காரிமங்கலம், மொரப்பூர், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் பென்னாகரம் ஆகிய 8 வட்டாரங்களுக்குட்பட்ட 15 மையங்களில் 06.06.2022 முதல் 10.06.2022 வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது. இச்சிறப்பு பயிற்சி முகாமில் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி வரும் 1,438 ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்று உள்ளனர்.
இச்சிறப்பு பயிற்சியானது ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு எவ்வாறு மிக மகிழ்ச்சியாக இருக்கின்றதோ, அதைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சியோடு மாணவ, மாணவியர்கள் கல்வி கற்கின்ற நிலையினை ஆசிரியர்கள், ஆசிரியைகள் பள்ளிகளில் உருவாக்கிட வேண்டும். இதுபோன்ற பயிற்சிகளை பெற்றுள்ள ஆசிரியர்கள், ஆசிரியைகள் தங்கள் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பாக பயிற்றுவிக்கும் போது அம்மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் மேம்படுவதோடு, அவர்களின் கற்கும் ஆர்வமும் அதிகரிக்கும். எனவே ஆசிரியர்கள், ஆசிரியைகள் அர்பணிப்பு உணர்வோடு, பணியாற்றி நீங்கள் பயிற்றுவிக்கும் மாணவ, மாணவியர்கள் எதிர்காலத்தில் மிகச்சிறந்தவர்களாக உருவாகுவதற்கும், உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கும் அடிப்படையாக நீங்கள் கற்பிக்கும் கல்வி அமைய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய தினம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர் (சமக்ர சிக்க்ஷா-Samagra Shiksha) திரு.ஆர்.சுதன் இஆப.. அவர்கள் தருமபுரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்து, தருமபுரி மாவட்டம், தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு நடைபெற்று வரும் "எண்ணும் எழுத்தும்" என்ற சிறப்பு பயிற்சி முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மேலும், தருமபுரி அரசு மாதிரிப்பள்ளியில் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்கள்.


