தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (06.06.2022) நடைபெற்றது. இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், ஆக்கரமிப்புகள் அகற்றுதல், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, புதிய வீடு, புதிய மின் இணைப்பு வசதி, முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 347 மனுக்கள் வரப்பெற்றன.
இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறையின் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருதுக்கு தேர்வு பெற்ற தருமபுரி மாவட்டம். நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், எர்ரபையன அள்ளி ஊராட்சி மன்றத் தலைவர், திரு.அ.சிலம்பரசன் அவர்கள் மற்றும் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாலவாடி அரசு உயர்நிலைப்பள்ளி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் திரு.எம்.சங்கர் அவர்கள் ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருதுகள் மற்றும் தலா ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலைகளை இன்று வழங்கினார்கள்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் கொடி நாள் நிதி வசூலில் சாதனை படைத்தமைக்காக தருமபுரி மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் திரு.க.சந்திரமோகன் அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் வெள்ளிப்பதக்கத்தினையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் தருமபுரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அலுவலகத்தின் சார்பில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இராஜா கொல்லஅள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து, பணியிடையில் மரணமடைந்த திருமதி.தெய்வானை அவர்களின் வாரிசுதாரரான அவரது மகள் திருமதி.ப.சித்ரா அவர்களுக்கு பங்குநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் பணிநியமன ஆணையினையும், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து, பணியிடையில் மரணமடைந்த திரு.தியாகராஜன் அவர்களின் வாரிசுதாரரான மகள் திருமதி.தி.ராஜலட்சுமி அவர்களுக்கு வாழைத்தோட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணையினையும், வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.9,050/- வீதம் ரூ.27,150/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களையும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.9,475/- வீதம் ரூ.37,900/- முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளையும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,950/- வீதம் ரூ.21,450/- மதிப்பிலான நடைபயிற்சி சாதனங்களையும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7,900/- வீதம் ரூ.39,500/- மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளையும், 14 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.350/- வீதம் ரூ.4,900/- மதிப்பிலான ஊன்றுகோல் சாதனங்களையும். 30 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,500/- வீதம் ரூ.1,05,000/- மதிப்பிலான நவீன காதொலி கருவிகளையும், 64 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,82,511/- மதிப்பிலான முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பயன்படுத்தும் 13 வகையான மருத்துவ பொருட்கள் அடங்கிய தொகுப்புகளும் என மொத்தம் 131 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,18,411/- மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 137 பயனாளிகளுக்கு ரூ.6,18,411/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திரு.பாபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.வி.கே.சாந்தி, உதவி ஆணையர் (கலால்) திரு.தணிகாசலம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், தருமபுரி மாவட்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர்.சாமுவேல் ராஜ்குமார், உட்பட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

